அமெரிக்க கோர்ட்டில் தலைமை நீதிபதியாக தமிழர் நியமனம்

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      உலகம்
US Court tamil Justice 2020 02 20

அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதியாக அமெரிக்க வாழ் தமிழரான சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் சுபரீம் கோர்ட்டுக்கு அடுத்த நிலையில் இருப்பது கொலம்பியா சர்கியூட் அப்பீல் கோர்ட்டு ஆகும். இந்த கோர்ட்டின் தலைமை நீதிபதி பதவிக்கு அமெரிக்க வாழ் தமிழரான சீனிவாசன் (வயது 52) நியமிக்கப்பட்டுள்ளார். இவரது முழுப்பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் சீனிவாசன் ஆகும். இவரது தந்தை பத்பநாபன் சீனிவாசன், திருநெல்வேலி அருகேயுள்ள மேல திருவேங்கடநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்காவில் கன்சாஸ் பல்கலைக் கழகத்தில் கணித பேராசிரியராக இருந்தார். தாயார் சரோஜா, அதே பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியையாக இருந்தார். 1960-களில் இவர்களது குடும்பம், அமெரிக்கா போய் குடியேறியது. ஸ்ரீகாந்த் சீனிவாசன் பிறந்தது சண்டிகார். பட்டம் படித்தது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம். அங்கேயே சட்டப்பட்டமும் பெற்றார். தொடர்ந்து எம்.பி.ஏ. பட்டமும் பெற்றார். அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் நீதிபதியாக இருந்த ஹார்வி வில்கின்சன்னிடம் குமாஸ்தாவாக இருந்தவர். 2011-ம் ஆண்டு முதல் முதன்மை துணை அட்டார்னி ஜெனரல் பதவி வகித்தார். ஒரு கட்டத்தில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பதவிக்கும் பரிசீலிக்கப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு ஆசிய நாட்டை சேர்ந்த ஒருவர் அமெரிக்க அப்பீல் கோர்ட்டில் தலைமை நீதிபதியாகி இருப்பது இதுவே முதல் முறை. அந்த வகையில் தமிழரான சீனிவாசன் புதிய வரலாறு படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து