இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - பலியான 3 பேரின் குடும்பத்திற்கு ரூ .1 கோடி நிதி : நடிகர் கமல்ஹாசன் அறிவிப்பு

வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2020      தமிழகம்
Kamal Haasan 2020 02 20

சென்னை : கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. ஒரு கோடி வழங்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

இந்தியன் 2’ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தில் காயமடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் இங்கு எந்த நிறுவனத்தையும் சார்ந்து வரவில்லை, நான் சிறுவயதில் இருந்தே சினிமாவில் வளர்ந்தேன். இது என் குடும்பம், எனது குடும்பத்தில் இந்த மூன்று பேரும் மரணம் அடைந்திருப்பது வருத்தமளிக்கிறது. 100 கோடி, 200 கோடி வருமானம் ஈட்டுபவர்கள் என சினிமாத்துறையினர் என்று மார்தட்டிக் கொண்டாலும், ஒரு கடைநிலை சினிமா ஊழியரின் உயிரை காப்பாற்ற முடியவில்லை என்பது தனிப்பட்ட வகையில் எனக்கு அவமானமாக இருக்கிறது. இனிமேலாவது சினிமாத்துறையில் எந்த ஒரு கடைநிலை ஊழியரும் படப்பிடிப்பு விபத்தால் மரணமடையாமல் இருக்க சினிமாத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் அளிக்கிறேன். இது நடந்த விபத்திற்கு பரிகாரம் அல்ல. இறந்தவர்களின் குடும்பத்திற்கு செய்யும் ஒரு சிறு முதலுதவி என்றும் இனிமேல் ஒரு கடைநிலை ஊழியரும் இறக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை எனது கோரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து