சென்னை டிரேட் சென்டரில் பேர்புரோ கண்காட்சி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020      தமிழகம்
OPS-2020-02-22

Source: provided

சென்னை : சென்னை கிரெடாய் அமைப்பின் மிகப்பெரிய வீட்டு வசதி கண்காட்சியான பேர்புரோ 2020 கண்காட்சியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு இதனை தொடங்கி வைத்தார்.

21 லட்சம் ரூபாய் முதல் 11 கோடிக்கும் மேற்பட்ட விலை மதிப்புகளில் கிட்டத்தட்ட 350-க்கும் மேற்பட்ட குடியிருப்பு திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் 70 டெவலப்பர்கள் வழங்கும் 400-க்கும் அதிகமான குடியிருப்பு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. 

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் முதன்மைச் செயலரான ராஜேஷ் லக்கானி, சி.எம்.டி.ஏ.யின் உறுப்பினர் செயலரான டி.கார்த்திகேயன் மற்றும் நகர், கிராமப்புற வடிவமைப்பு துறை டைரக்டர் சந்திர சேகர் சக்காமுரி ஆகியோர் இக்கண்காட்சி துவக்கவிழாவில் பங்கேற்றனர். 

இக்கண்காட்சியில் இடம்பெறும் அனைத்து குடியிருப்பு செயல்திட்டங்களும், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டவை என்று கிரெடாய் சென்னை அறிவித்திருக்கிறது. வீடுகளை வாங்குபவர்களுக்கு சிரமமில்லாத, எளிதான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுவதை இது உறுதிசெய்கிறது என்று கிரெடாய் தெரிவித்திருக்கிறது.

மேலும் பேர்புரோ 2020 கண்காட்சி நிகழ்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு வீட்டுவசதி திட்டமும், வெவ்வேறு வருவாய் பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களின் தேவைகளை சிறப்பான விலைநிர்ணயம் மற்றும் சிறப்பு சலுகைகளின் மூலம் புர்த்தி செய்வதாக இருக்கின்றன. பல்வேறு குடியிருப்பு பிரிவுகளில் இத்திட்டங்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

 

கிரெடாய் அமைப்பின் தலைவர் ஸ்ரீதரன் இந்நிகழ்வில் பேசும்போது, இத்தொழில்துறையில் அனைவரும் வாங்கக் கூடியவாறு விலை குறைவான வீடுகளுக்கான தேவையை இது நிச்சயம் உருவாக்கும். அதுமட்டுமன்றி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டிட விதிகளில் சமீபத்தில் செய்யப்பட்டிருக்கும் திருத்தங்கள், இம்மாநகரில் எளிய விலையிலான வீடுகளுக்கான தேவையையும், உருவாக்கலையும் பெரிதும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறினார்.இந்த பேர்புரொ 2020 கண்காட்சியில் ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி, யூனியன் வங்கி மற்றும் எல்.ஐ.சி. ஹவுசிங் ஆகிய வங்கிகள் கலந்து கொண்டுள்ளன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து