நீதிமன்றத்தின் முக்கியத்துவமான தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏற்றார்கள் - பிரமதர் மோடி பெருமிதம்

சனிக்கிழமை, 22 பெப்ரவரி 2020      இந்தியா
PM Modi 2020 02 22

புது டெல்லி : உலக அளவில் விவாதத்துக்கு உள்ளாக்கிய நீதிமன்றத்தின் சமீபத்திய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தீர்ப்புகளை 130 கோடி மக்களும் முழு மனதுடன் ஏற்றார்கள் என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு தெரிவித்தார்.

டெல்லியில் நேற்று சர்வதேச நீதிமன்ற மாநாடு 2020, உலக மாற்றத்தில் நீதிமன்றம் என்ற தலைப்பில் நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஐகோர்ட் தலைமை நீதிபதிகள், நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

பாலின நீதி, மூன்றாம் பாலினத்தவருக்கான நீதி, முத்தலாக், மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமை அளித்தல் ஆகியவற்றை செய்யாமல் உலகில் எந்த நாடும், சமூகமும் முழுமையான வளர்ச்சி அடைந்து விட்டோம் எனக் கூற முடியாது. ராணுவத்தில் பெண்கள் பணியாற்ற உரிமையும், பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் 26 வாரங்கள் விடுமுறையும் அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் நீதி பரிபாலனத்தை நீதித்துறை மறுவரையறை செய்துள்ளது. தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்டுத்துவதாலும், இணையதளத்தை முழுமையாக பயன்படுத்துவதாலும் நீதிமன்றத்தை எளிமையாக நிர்வாகம் செய்து வேகமாக நீதி வழங்க முடியும். செயற்கை நுண்ணறிவையும், மனித ஆற்றலையும் திறம்படப் பயன்படுத்தும் போது, வேகமான நீதி பரிபாலனம் செய்ய முடியும். அதே சமயம், தகவல்களை பாதுகாத்தல், சைபர் குற்றங்கள் ஆகியவையும் நீதித்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். சமீப காலங்களில், நீதித்துறை வழங்கிய சில விமர்சன ரீதியான தீர்ப்புகள் உலக அளவில் விவாதப்பொருளாக மாறின. இந்த வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன், பல்வேறு தரப்பிலிருந்து தீர்ப்பின் பின்விளைவுகள் குறித்து அச்சம் வெளிப்பட்டது. ஆனால், என்ன நடந்தது?. 130 கோடி இந்திய மக்களும் முழு மனதுடன் அந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் உலக அளவில் நடக்கும் மாற்றங்கள் சமூகத்தின், பொருளாதாரத்தின், தொழில்நுட்பத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றங்கள் தேவையானதாகவும், நியாயமானதாகவும் அவசியமாகவும் இருக்கும். நீதித்துறை, பாராளுமன்றம், நிர்வாகம் ஆகிய மூன்றும் அரசியலமைப்பின் மூன்று தூண்கள். நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்த சவால்களை இந்த 3 தூண்களும் தீர்த்து வைத்துள்ளன. ஏறக்குறைய 1500 வழக்கில் இல்லாத சட்டங்களை அரசு நீக்கி, சமூகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்த புதிய சட்டங்களையும் இயற்றியுள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து பெண்களுக்கு சம உரிமை அளித்து, வாக்குரிமையும் வழங்குகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து