முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 நாள் பயணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று இந்தியா வருகை - அகமதாபாத்தில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 23 பெப்ரவரி 2020      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : அமெரிக்க அதிபர்  டிரம்ப், 2 நாட்கள் பயணமாக இன்று இந்தியா வருகிறார். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வல்லபாய் கிரிக்கெட் மைதானம் வரை 22 கி.மீ. தூரத்துக்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இன்று இந்தியா வருகிறார். குஜராத்தின் அகமதாபாத் நகர் விமான நிலையத்தில் வந்திறங்கும் அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பார் என்று தெரிகிறது. அங்கிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் கிரிக்கெட் மைதானத்துக்கு டிரம்ப் காரில் செல்கிறார். வழிநெடுக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு டிரம்புக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர்.  வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் அதிபர் டிரம்ப், அங்கு நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இதில் சுமார் 1.25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அமெரிக்க அதிபரின் வருகையை ஒட்டி அவரது பீஸ்ட் கார், மரைன் ஒன் ஹெலிகாப்டர் உள்ளிட்டவை அகமதாபாத்துக்கு வந்துள்ளன. அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் நகரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

அகமதாபாத் நகரம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 25 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் சக்திவாய்ந்த ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டல்கள், விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். அதிபர் டிரம்ப் வருகையின் போது முக்கிய சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட உள்ளது.  அமெரிக்க அதிபர் டிரம்புடன் அவரது மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜெராட் குஷ்னர் உள்ளிட்டோரும் வருகின்றனர். அகமதாபாத் வரவேற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு அங்கிருந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கு டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் செல்கின்றனர். அன்றிரவு டெல்லியில் உள்ள ஐ.டி.சி. மவுரியா நட்சத்திர ஓட்டலில் டிரம்ப் தங்குகிறார். ஜனாதிபதி மாளிகையில் நாளை அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா வரும் அமெரிக்க அதிபர்  டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப், அவரது மகள் இவான்கா, மருமகன் ஜாரெட்  குஷ்னர் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் குழுவினர் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இந்திரா பாலம் மற்றும் கோட்டேஷ்வர்  கோயில் வழியாக மோட்டேரா கிரிக்கர் மைதானம் செல்கின்றனர்.

முன்னதாக இவர்களை வரவேற்பதற்காக சாலையோரம் இந்திய பாரம்பரிய கலாசாரத்தை சித்தரிக்கும் 28 நிலைகளை அகமதாபாத் மாநகராட்சி (ஏ.எம்.சி.) அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். அகமதாபாத்தில் உலகின் மிகப்பெரிய மோட்டேரா மைதானத்தை அதிபர் டிரம்ப் திறந்து  வைக்கவுள்ளார். நமஸ்தே டிரம்ப் என்ற இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளனர். முன்னதாக அகமதாபாத் விமான  நிலையம் வந்திறங்கும் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு விமான நிலையத்தில் சங்க்நாத் எனப்படும் சங்க நாதம் இசைத்து  வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பிரம்மநாதம் என்று அழைக்கப்படும் இந்த ஒலி பிரபஞ்சத்தில் காணப்படும் அதிர்வுகள் மற்றும் ஆற்றல்களையும் நேர்மறை எண்ணங்களையும்  உள்ளிளுக்கும் என நம்பப்படுகிறது. தொடர்ந்து 150 அடி நீள சிவப்புக் கம்பளத்தில் நடந்து வரும் டிரம்ப் தம்பதியை வரவேற்க நாட்டுப்புறக் கலைஞர்களின்  நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. அதிபர் டிரம்ப், அகமதாபாத் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிலுள்ள உலக அதிசயமான  தாஜ்மகாலுக்கு தனது மனைவி, மகள், மருமகனுடன் சென்று சுற்றிப் பார்க்கவுள்ளார். நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் சந்திப்பு, பிரதமர் மோடியுடனான ஆலோசனை, அமெரிக்க தூதரக அதிகாரிகளுடன் சந்திப்பு  உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவுள்ளன. அதன்பின், 2 நாள் இந்திய பயணத் திட்டத்தை முடித்துக்கு கொண்டு டிரம்ப் குழுவினர் வாஷிங்டன் புறப்பட்டு  செல்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து