ரூ. 21 ஆயிரம் கோடிக்கு இந்தியா - அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் - அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்து

செவ்வாய்க்கிழமை, 25 பெப்ரவரி 2020      இந்தியா
trump military agree sign 2020 02 25

புது டெல்லி : டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தியா - அமெரிக்கா இடையே ரூ.21 ஆயிரம் கோடிக்கு ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முதல் நாளான நேற்று முன்தினம் அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்றார். பிறகு அங்குள்ள மொடேரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். நேற்று முன்தினம் மாலை ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலுக்கு சென்ற டிரம்ப், தன் குடும்பத்தினருடன் அந்த நினைவு சின்னத்தை சுற்றிப்பார்த்தார். பின்னர் டெல்லி சென்று ஐ.டி.சி. நட்சத்திர ஓட்டலில் தங்கினார். முதல் நாள் நிகழ்ச்சிகளில் இந்தியாவையும் பிரதமர் மோடியையும் அதிபர் டிரம்ப் மிகவும் புகழ்ந்துரைத்தார்.

நேற்று 2-வது நாளாக அதிபர் டிரம்ப் டெல்லியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நேற்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்றார். அங்கு அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டிரம்பும், அவரது மனைவி மெலானியாவும் டெல்லி ராஜ்காட்டுக்கு சென்று அங்குள்ள காந்தி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து ஐதராபாத் இல்லத்துக்கு அதிபர் டிரம்ப் சென்றார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்றார். 

பின்னர் அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் இந்தியா-அமெரிக்கா இடையிலான பல்வேறு துறை விவகாரங்கள் குறித்து பேசினர்.  முதலில் டிரம்ப்பும், மோடியும் தனியாக பேச்சு நடத்தினார்கள். வர்த்தகம், ராணுவம் மற்றும் இரு நாட்டு ராஜ்ஜிய உறவுகள் குறித்து விவாதித்தனர். இதைத் தொடர்ந்து இரு நாட்டு அதிகாரிகள் குழு அளவிலான பேச்சு நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் நிறைவில் இந்தியா - அமெரிக்கா இடையே எரிசக்தி, ராணுவம் உள்ளிட்ட 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  மேலும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் 300 கோடி டாலர் (ரூ. 21,606 கோடி) மதிப்பிலான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. டிரம்ப் - மோடி முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் அதிகாரிகள் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவின் அப்பாச்சி மற்றும் எம்.எச். -60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட நவீன ராணுவ உபகரணங்கள் இந்திய ராணுவத்திற்கு வாங்கப்படும். நாட்டின் பாதுகாப்புக்காக மிக அதிநவீன ஆயுதங்களை உருவாக்கி இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி இருந்தார். அந்த அதிநவீன பாதுகாப்பு கருவிகளை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. குறிப்பாக பயங்கரவாதத்துக்கு எதிராக அதிநவீன ஆயுதங்களை இந்தியா பயன்படுத்த அமெரிக்கா உதவும் என்று கூறப்படுகிறது. எம்.எச். 60 ரோமியோ வகையை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்தக் கூடிய சிறப்புகள் கொண்டது. நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் வாய்ந்த அந்த ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்படைக்கு மேலும் வலிமை கொடுக்க முடியும். பாதுகாப்புத்துறையில் செய்யப்பட்ட இந்த புதிய ஒப்பந்தங்கள் இந்திய ராணுவ துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இந்திய கடற்படைக்கு 24 ராணுவ ஹெலிகாப்டர்கள் வாங்கப்படவுள்ளன. எம்.எச். 60 ஆர் என்ற வகையை சேர்ந்த அந்த ஹெலிகாப்டர்கள் பல்வேறு பணிகளுக்கும் பயன்படுத்த கூடிய சிறப்புகள் கொண்டது. நீண்ட நேரம் பறக்கும் ஆற்றல் வாய்ந்த அந்த ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்படைக்கு மேலும் வலிமை சேர்க்க முடியும். இந்த 24 ஹெலிகாப்டர்கள் தவிர 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களும் வாங்கப்படவுள்ளன. மேலும் அமெரிக்காவில் இருந்து அதிகளவு ஆளில்லா விமானங்களை வாங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிரோன்கள் மூலம் அதிக எடை கொண்ட ஆயுதங்களை எடுத்து சென்று தாக்குதல் நடத்த முடியும். கடலோர காவல் படைக்கும் 6 நவீன ரோந்து ஹெலிகாப்டர்கள் பெறவும் நேற்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தங்கள் இந்திய ராணுவத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து