கொரோனா வைரஸ் எதிரொலி: ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      தமிழகம்
CM 2020 02 28

ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 300 பேரை மீட்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

சீனாவின் வுகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்தியா, தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் இப்போது வளைகுடா நாடுகளிலும் பரவி வருகிறது. அங்கிருந்து ஈரான் நாட்டிற்கும் பரவி, பலரையும் காவு வாங்கி வருகிறது. ஈரானில் மட்டும் இதுவரை 26 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். 141 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஈரான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஈரானில் தங்கியுள்ள வெளிநாட்டினர் சொந்த நாடுகளுக்கு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் இருந்து 900-க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய ஈரான் நாட்டில் தங்கி உள்ளனர். இவர்களில் 700-க்கும் அதிகமானோர் குமரி மாவட்ட மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள். இவர்கள் ஈரானின் சீரா துறைமுகத்தில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள். ஈரானில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விட்டதால் இவர்களால் நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஈரானில் தங்கியுள்ள குமரி மீனவர் சகாய அஸ்கர் என்பவர் சமூக ஊடகங்கள் மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரானில் நாங்கள் இருக்கும் பகுதியில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் இருக்கும் பகுதிக்கு இன்னும் பரவவில்லை. கொரோனாவின் பாதிப்பு இங்கு வரும் முன்பு இந்தியா திரும்பி விட முடிவு செய்தோம். குமரி மாவட்டத்தை சேர்ந்த 700 மீனவர்கள் உட்பட 900-க்கும் மேற்பட்ட தமிழர்கள் நாடு திரும்ப தயாரானோம். நாங்கள் வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் நாங்கள் ஊர் திரும்ப அனுமதி மறுத்து விட்டனர். எங்களை தனி விமானம் மூலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் உருக்கமாக உதவி கேட்டிருந்தார்.

சீனாவின் வுஹான் நகருக்கும், ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கப்பலில் இருந்த இந்தியர்களை மீட்க இந்திய அரசு தனி விமானம் அனுப்பியது. இதே போல் ஈரானில் சிக்கி தவிக்கும் தங்களையும் மீட்டுவர சிறப்பு விமானம் அல்லது கப்பலை அனுப்ப வேண்டும் என்று மீனவர்களும், அவர்களது உறவினர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது குறித்து சென்னையில் உள்ள மீன்வளத்துறை இயக்குனர் கூறுகையில், தமிழக மீனவர்கள் நிலை குறித்து இந்திய தூதரகத்திடம் விவரம் கேட்டுள்ளோம். ஓரிரு நாளில் இது பற்றி அறிக்கை கிடைக்கும். அதன் பிறகு வெளியுறவு துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு ஈரானில் தவிக்கும் மீனவர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு செய்யும்படி கோருவோம் என்று தெரிவித்தார்.  இந்நிலையில், ஈரான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 300 மீனவர்கள் உட்பட 450 இந்திய மீனவர்களை மீட்க வேண்டும் என நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், இந்திய மீனவர்கள் ஈரானைச் சுற்றியுள்ள துறைமுகங்களில் தத்தளிப்பதாகவும் தங்களை உடனடியாக மீட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். அதனால், ஈரானிலுள்ள இந்திய தூதரகம் அந்த மீனவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுத்து, அவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து