குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற மாட்டோம்: மத்திய அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 28 பெப்ரவரி 2020      இந்தியா
Ravi-Shankar-Prasad 2020 02 28

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை. அதை அரசு திரும்பப் பெறாது. ஆனால், எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களை சமாதானப்படுத்த முயல்வோம் என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் பகுதியில் மக்கள் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி வடகிழக்குப் பகுதியில் குடியுரிமை சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதல், கலவரமாக மாறியதில், இதுவரை 38 பேர் பலியாகியுள்ளார்கள். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளார்கள். இந்நிலையில் டேராடூனில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வருமான வரி தீர்ப்பாயம் தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்றுப் பேசியதாவது:

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சிறுபான்மையினர் மதரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் போது அவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கிட கூடாது. குடியுரிமைத் திருத்த சட்டத்தைத் திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை. குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மக்களை சமாதானப்படுத்த முயல்வோம். இதில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள்தான் விழிக்க முடியும். ஆனால், விழித்துக் கொண்டு, தூங்குவது போல் நடிப்பவர்கள் அல்ல. அனைத்து மதத்தினரைச் சேர்ந்த மக்களின் சமமான அமைதியான வாழ்வுதான் இந்தியாவின் நெறிமுறையாகும். இந்தியா என்பது அன்பான உபசரிப்புக்கு உரிய நாடு. அகமதாபாத் வந்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எவ்வாறு வரவேற்பு அளித்தோம் என்பதைப் பார்த்திருப்பீர்கள். அதே நேரத்தில் நாம் மிகவும் கடினமானவர்கள். ஒருபோதும் யாருக்கும் பணிந்து செல்ல மாட்டோம். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து