திருமங்கலம் அருகே போலி மருத்துவர் கழுத்தை அறுத்து படுகொலை:

5 docter dead

திருமங்கலம், -மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே  போலி மருத்துவர் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்த பால்ராஜ் (70).இவருக்கு இரண்டு மகளும் ஒரு மகனும் உள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவரான பால்ராஜ்  அங்குள்ள தனியார் மருந்து வமனையில் மருத்துவ உதவியாளராக இருந்துள்ளார். இவர் ஆலம்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தன்னை மருத்துவர் என கூறிக் கொண்டு அந்த பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார் . இவருக்கு உதவியாக அவரது மனைவி செல்வியும் சேர்ந்து இப்பகுதியில் மருத்துவம் பார்த்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பால்ராஜ் போலி மருத்துவர் என தெரிய வந்ததை அடுத்து பால்ராஜ் மற்றும் அவரது மனைவி செல்வியை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியில் வந்த இவர் மறுபடியும் மருத்துவ தொழிலை செய்து வந்துள்ளார்.
 இந்நிலையில் பால்ராஜ் மனைவி செல்வி உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். தனது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்து வைத்த பால்ராஜ் வீட்டில் தனியாக இருந்து மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பால்ராஜ் வீட்டின் அருகே வசித்து வந்த பாலசுப்ரமணி என்பவர் நேற்று அதிகாலை காலைக்கடன் கழிப்பதற்காக வெளியில் வந்த போது பால்ராஜின் வீட்டில் விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதை கண்டு வீட்டுக் கதவை தட்டியபோது கதவு தானாக திறந்துள்ளது. இதனால்  சந்தேகமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பால்ராஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் உடனடியாக திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
 இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் டிஎஸ்பி அருண் தலைமையிலான தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்த பால்ராஜ் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பால்ராஜ் ஆலம்பட்டியில் சொந்தமாக இடம்  வைத்துள்ளார். இந்த இடம் தொடர்பாக ஏற்கனவே சிலருடன் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். அதே சமயம் இடப் பிரச்சினை காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.வீட்டில் தனியாக வசித்து வந்த போலி மருத்துவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து