முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளை மகளிர் டி20 உலக கோப்பை பைனல்: மெல்போர்னில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

வெள்ளிக்கிழமை, 6 மார்ச் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

நாளை மகளிர் டி20 உலக கோப்பை பைனல்: மெல்போர்னில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

சிட்னி : மழை காரணமாக  இங்கிலாந்து - இந்தியா இடையிலான அரையிறுதி ரத்தானதால், லீக் சுற்றில் அதிக புள்ளிகள் பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு எளிதாக முன்னேறியது.

மற்றொரு போட்டியில் தெ.ஆப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றது. லீக் சுற்றில்  ஆஸ்திரேலியா 17ரன் வித்தியாசத்திலும், வங்கதேசத்தை 18ரன் வித்தியாசத்திலும் , நியூசிலாந்தை 3ரன் வித்தியாசத்திலும், இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி ஏ பிரிவில் முதலிடம் பிடித்ததுடன் அரையிறுதிக்கும் தகுதி பெற்றது. முதல் அரையிறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன. ஆனால் சிட்னியில் காலை முதலே பெய்த மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நிற்காததால்  ஒரு கட்டத்தில் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆட்டம் கைவிடப்பட்டாலும் லீக் சுற்றில் பெற்ற வெற்றிகளின் அடிப்படையில்  இந்தியா முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. லீக் சுற்றில்   இந்தியா 4 ஆட்டங்களில் விளையாடி எல்லாப் போட்டிகளிலும் வெற்றிப் பெற்று 8 புள்ளிகளுடன்  இருந்தது. இங்கிலாந்து லீக் சுற்றில்  தாய்லாந்தை 98ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 42ரன் வித்தியாசத்திலும், வெஸ்ட் இண்டீசை 46 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.  தென் ஆப்ரிக்காவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றி,  ஒன்றில் தோல்வி என 6 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்த இங்கிலாந்து ஆடாமலேயே போட்டியில் இருந்து வெளியேறியது. 

அதேபோல் ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா இடையிலான 2-வது அரையிறுதி போட்டியும் சிட்னி  மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற தெ.ஆப்ரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்து. முதலில் களம் கண்ட ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன் எடுத்தது. கேப்டன் மெக் லன்னிங் அதிகபட்சமாக 49 ரன் எடுத்தார். தெ.ஆப்ரிக்காவின் நடைன் டீ கிளார்க் 3 விக்கெட்களை கைப்பற்றினார். தொடர்ந்து தென் ஆப்ரிக்கா 135 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் காண இருந்தது. ஆனால் இடையில் மழை குறுக்கீடு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதனால் மீண்டும் ஆட்டம் தொடங்கப்பட்ட போது டக்வொர்த் லீவிஸ் 13 ஓவரில் 98 ரன் எடுக்க தெ.ஆப்ரிக்காவுக்கு இலக்கு மாற்றப்பட்டது. ஆனால் 13 ஓவர் முடிவில் தெ.ஆப்ரிக்கா 5 விக்கெட் இழப்புக்கு 92 ரன் மட்டுமே எடுத்தது. கடைசி வரை களத்தில் இருந்து போராடிய லாரா வோல்வார்ட் 27 பந்துகளில் 41 ரன் எடுத்தும் பலனில்லாமல் போனது. அதனால் ஆஸ்திரேலியா 5ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மீண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது. நாளை மெல்போர்னில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், மழை காரணமாக ஆட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் விதிகள் இருக்கின்றன. அவற்றை நாம் கடைபிடிக்க வேண்டும். வருங்காலத்தில் இதுப்போன்று நடக்காமல் இருக்க போட்டிகள் கைவிடப்படுவதற்கு பதில் இன்னொரு நாள் போட்டியை நடத்த வேண்டும். அதற்கு ஏற்ப போட்டிகளுக்கு இடையே கூடுதலான ஓய்வு நாட்கள் இருக்க வேண்டும்.இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட்: ஏமாற்றமாக உள்ளது. உலககோப்பை போட்டி இப்படி முடிவதை விரும்பவில்லை. ஆனால் ஏதும் செய்வதற்கில்லை. ஆனால் தடைபடும் போட்டி இன்னொரு நாளில் நடந்திருந்தால் நல்லது. எங்களுக்கு இழப்புதான். ஆனாலும் அரையிறுதி வரை முன்னேறுவோம் என்ற எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளோம் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து