முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் தடுப்பு முன் எச்சரிக்கை ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 19 மார்ச் 2020      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்-ராமநாதபுரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு செய்தார்.
 ராமநாதபுரம்­ புதிய பேருந்து நிலைய வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, நகராட்சி நிர்வாகம் ஒருங்கிணைந்து மேற்கொண்ட கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மாவட்டத்தில் மொத்தம் 16 மண்டல குழுக்களும், 33 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட எல்லைகளில் 3 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு  வெளியூர்களிலிருந்து வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள், பிற வாகனங்கள் அனைத்திலும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.  மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அங்கண்வாடி மையங்களுக்கு 31.03.2020 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை குழுக்களாக கூடுவதையோ, வெளியில் செல்வதையோ தவிர்த்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 மேலும், மாவட்டத்திலுள்ள 10 அரசு மருத்துவமனைகள், 59 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 259 துணை சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1077, 1800 425 7038 என்ற கட்டணமில்லா தொடர்பு எண்களில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.  கொரோனா தொடர்பாக தனிமைப்படுத்தி சிறப்பு மருத்துவ சிகிச்சை அளித்திட 86 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்களுக்கு கைகளை சுத்தமாக கழுவி பராமரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதோடு, தேவையற்ற பயணங்களையும், கூட்டமாகக் கூடும் நிகழ்வுகளையும் தவிர்த்திட  அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அண்டை நாடுகளிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த மொத்தம் 245 நபர்கள் சொந்த ஊர் வந்துள்ளனர்.  இவர்கள் அனைவரும் பரிசோதிக்கப்பட்டு இதுவரை 203 நபர்கள் தனிமைப்படுத்தும் காலம் முடிந்து கொரோனா தொற்று ஏதுமில்லாமல் நலமுடன் உள்ளனர்.  மீதமுள்ள 42 நபர்களும் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.  அவர்களுக்கும் இதுவரை கொரோனா அறிகுறி ஏதும் தென்படவில்லை.  அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் இல்லை. பொதுமக்கள் கொரோனா தொடர்பாக அச்சம் கொள்ள தேவையில்லை.  இருப்பினும் விழிப்புடன் இருந்திட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
 முன்னதாக, மாவட்ட கலெக்டர் ராமநாதபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.  மேலும், பொது சுகாதாரத் துறையின் மூலம் கை கழுவும் முறை குறித்து வழங்கப்பட்ட செயல்முறை விளக்கத்தையும் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மூலம் திரையிடப்பட்ட கொரோனா தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படத்தையும் பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) மா.பிரதீப்குமார், ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் என்.ஓ.சுகபுத்ரா, இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.பி.வெங்கடாசலம் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து