கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து

சனிக்கிழமை, 28 மார்ச் 2020      ஆன்மிகம்
Velankanni church 2020 03 28

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயத்தில் ஈஸ்டர் பண்டிகை ரத்து செய்யப்படுவதாக பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இதனை பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுதளங்கள், சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் பக்தர்கள் இன்றி பூஜைகள் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான இந்து கோவில்களில் கோவில் குருக்கள் மட்டும் பூஜைகள் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஈஸ்டர் பண்டிகை என்ற கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஈஸ்டர் பண்டிகை அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

இந்த பண்டிகையை யொட்டி கிறிஸ்தவர்கள், இயேசுவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூறும் விதமாக 40 நாட்களுக்கு மேலாக நோன்பிருப்பது வழக்கம்.இந்த நோன்பு காலத்தை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்று அழைக்கிறார்கள்.இந்த ஆண்டு 46 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகிறார்கள். தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து ஜெபிப்பார்கள். தவக்காலத்தில் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. வெள்ளிக்கிழமைதோறும் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக கிறிஸ்தவ ஆலயங்களில் சிலுவைப்பாடு நிகழ்ச்சிகளை நடத்தி ஜெபிப்பார்கள்.

இந்நிலையில் உலக பிரசித்திபெற்ற கிறிஸ்தவ ஆலயமான நாகை மாவட்ட வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கோவிலில் ஆண்டு தோறும் ஈஸ்டர் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வேளாங்கண்ணி பேராலயம் கடந்த வாரம் பூட்டப்பட்டது. இதனால் கோவிலில் திருப்பலிகள் அனைத்தும் மறுஅறிவிப்பு வரும்வரை நடைபெறாது என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதனால் தவக்காலத்தின் இறுதி வாரமான வருகிற ஏப்ரல் 9-ந் தேதி (பெரிய வியாழக்கிழமை) அன்று இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவியதின் நினைவாக நடைபெற இருந்த பாதம் கழுவும் நிகழ்ச்சியும், ஏப்ரல் 10-ந் தேதி பெரிய வெள்ளி அல்லது (புனித வெள்ளி) இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் விதமாக மும்மணி ஆராதனை, சிலுவைப்பாடு ஆராதனை போன்ற நிகழ்ச்சிகளும் அதனை தொடர்ந்து ஏப்ரல் 12 - ந் தேதி இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டர் பண்டிகை நிகழ்ச்சியும் நடைபெறாது என வேளாங்கண்ணி பேராலயம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் கிறிஸ்தவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து