கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தமிழக அரசு - முதல்வருக்கு கவர்னர் பன்வாரிலால் பாராட்டு: தலைமைச் செயலாளர் சண்முகம் தகவல்

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      தமிழகம்
CM Governor  Banwarlal 2020 03 31

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும் தமிழக அரசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் மனதார பாராட்டியதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.

சென்னையில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் மாதத் தவணையை செலுத்தவும், மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து கடன் பெற்றவர்கள் தவணைத் தொகை செலுத்தவும் 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.  உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தவும்,  வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்தவும் ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வீட்டு வசதி வாரியத்துக்கு தவணை செலுத்தவும் அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்கள் வீட்டை சுற்றி 8 கிமீ சுற்றளவுக்கு வீடு வீடாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிப்காட் நிறுவனத்தில் தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த 3  மாதம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மூச்சுத்திணறலுக்காக தனியார் மருத்துவமனைக்கு யாராவது வந்தால் தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தவர்களில் 100-ல்  2 பேருக்குத்தான் அதிதீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.

பரந்த வெளியில் காய்கறி, மீன் இறைச்சி கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வீட்டு வாடகை தொகையை 2 மாதம் கழித்து பெற்றுக் கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு உடை இல்லாமல் எந்த மருத்துவரும் சிகிச்சை அளிக்கக் கூடாது. மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் உள்ளன. தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான 17,000 படுக்கைகள் தயராக உள்ளன. கொரோனவுக்காக நாளை(இன்று) முதல் கூடுதலாக 6 பரிசோதனை மையம் செயல்படும். மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்ட்டுள்ளன.

வாகன ஓட்டுநர் உரிமங்கள், தகுதிச் சான்றுகளை புதுப்பிக்க ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே சளி சோதனை நடத்தப்படுகிறது. மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில் ஒரு மாத வாடகையை வீட்டு உரிமையாளர்கள் வாங்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஒருபடி மேலே போய் இரண்டு மாத வாடகையை காலம் தாழ்த்தி வாங்கிக் கொள்ள கூறியிருக்கிறார். இவ்வாறு தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.  மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வரும் தமிழக அரசு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மனதார பாராட்டியதாக தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார். பேட்டியின் போது சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் உடனிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து