மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.10 லட்சமாக உயர்வு: மே.வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 31 மார்ச் 2020      இந்தியா
mamata-banerjee 2020 03 31

மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவலாக இல்லை. ஒருவருக்கொருவர் என்ற அளவில்தான் இருக்கிறது. ஆனாலும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை, 1,251 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ. 5 லட்சத்திற்கான காப்பீட்டுத் திட்டத்துக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. இந்தக் காப்பீட்டுத் தொகையை, ரூ.10 லட்சமாக உயர்த்தவுள்ளோம். மேலும், தூய்மைத் தொழிலாளர்கள், போலீசாருக்கும் இந்தக் காப்பீட்டை வழங்க முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவால் அனைத்து மக்களும் வீடுகளில் முடங்கியிருக்கும் சூழலில், கொரோனா வைரசுக்கு எதிரானா போரில் களமிறங்கியுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசாரை ஊக்கப் படுத்தும் வகையில், புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிவித்த, மேற்கு வங்க முதல்வரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து