முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊரடங்கை மீறுவோரை தடுத்து நிறுத்தும் போலீஸ் ரோபோ: துனிசியாவில் புதிய முயற்சி

சனிக்கிழமை, 4 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

துனிசியாவில் ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்களை தடுப்பதற்காக ரோந்துப் பணியில் போலீஸ் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை புரட்டிப் போட்டுள்ளது. சமூக விலகலை கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன. இதனையும் மீறி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தேவையில்லாமல் நடமாடுவதை காண முடிகிறது. அவர்களை ஒழுங்குபடுத்த போலீசார் படாதபாடுபடுகின்றனர்.

இந்நிலையில், துனிசியா நாட்டின் தலைநகரில் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக ரோந்துப் பணியில் போலீஸ் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. 4 சக்கரங்கள் கொண்ட இந்த போலீஸ் ரோபோக்கள் முக்கிய தெருக்களில் நிறுத்தப்பட்டுள்ளன. வெறிச்சோடிய தெருக்களில் யாராவது நடந்து வந்தால் அவர்களை இந்த ரோபோக்கள் தடுத்து நிறுத்தி கேள்வி கேட்கும். ஏன் வீட்டை விட்டு வெளியே வந்தீர்கள்? உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்? என கேட்கும். உடனே அந்த நபர்கள் ரேபோவில் உள்ள கேமரா முன்பு தங்கள் அடையாள அட்டைகள் மற்றும் பிற ஆவணங்களை காட்ட வேண்டும்.

இதன் மூலம் அதிகாரிகள் அவற்றை எளிதில் சரிபார்த்து தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க முடிகிறது. தேவையில்லாமல் மக்கள் வெளியே வந்து ஊரடங்கை மீறுவது தெரியவந்தால் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்கின்றனர். போலீஸ் ரோபோ பணியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சிக்கு சிலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம், இது மிகவும் மெதுவாக செயல்படுவதாக சிலர் குறை கூறி உள்ளனர். இந்த போலீஸ் ரோபோக்களை இனோவா ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதே போல் மருத்துவமனைகளில் பயன்படுத்தக் கூடிய ரோபோக்களையும் இந்த நிறுவனம் உருவாக்கி உள்ளது. இதில் முதற்கட்டமாக ஒரு ரோபோ விரைவில் துனிஸ் நகரத்தில் உள்ள மருத்துவமனையில் செயல்பாட்டிற்கு வரும். கொரோனா வைரசால் பாதித்தவர்களின் அருகில் மருத்துவர்கள் சென்று நடவடிக்கை எடுக்கும் போது உடல்ரீதியாக ஏற்படும் தொடுதல் காரணமாக மருத்துவர்களுக்கும் சில சமயங்களில் கொரோனா தொற்றுகிறது. மருத்துவ கவனிப்பு பணிகளுக்கு இது போன்ற ரோபோக்கள் பயன்படுத்தப்படுவதன்மூலம், மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையிலான உடல் ரீதியான தொடர்பைக் குறைக்க உதவும் என்று இனோவா நிறுவன தலைமை விற்பனை அதிகாரி பர்ஹாட் கூறினார். துனிசியாவில் ஊரடங்கு உத்தரவு இரண்டாவது வாரம் நீடிக்கிறது. மொத்தம் 436 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து