முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்ட இந்தியா-பாக். இடையே கிரிக்கெட் போட்டி நடத்தலாம் - அக்தர் யோசனை

வியாழக்கிழமை, 9 ஏப்ரல் 2020      விளையாட்டு
Image Unavailable

கொரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் வலியுறுத்தியுள்ளார்.

ஆட் கொல்லி நோயானா கொரோனா வைரசுக்கு ஆசிய நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தாக்குதலில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளதால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவுகரம் நீட்டுவதற்காக இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டியை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பால் உருவாகியுள்ள இந்த கடினமான காலக்கட்டத்தில், நலநிதி திரட்டுவதற்காக இந்தியா, பாகிஸ்தான் இடையே மூன்று போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன். இந்த போட்டிகளின் முடிவு எதுவாக இருந்தாலும் இதனால் இரு நாட்டினருமே கவலைப்படமாட்டார்கள். விராட் கோலி (இந்திய கேப்டன்) சதம் அடித்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். பாபர் அசாம் (பாகிஸ்தான் 20 ஓவர் அணியின் கேப்டன்) சதம் கண்டால் நீங்கள் உற்சாகமடையுங்கள். களத்தில் எந்த முடிவு கிடைத்தாலும் இரு அணிகளுமே வெற்றியாளர்கள் தான். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை, இரு நாடுகளும் கொரோனா சிகிச்சை மற்றும் தடுப்பு பணிகளுக்கு சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம்.

ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் இந்த போட்டியை நடத்தலாம். இப்போது ஒவ்வொருவரும் வீட்டிலேயே இருப்பதால் டி.வி.யின் மூலம் அதிக அளவில் பார்வையாளர்களை ஈர்க்க முடியும். ஆனால் தற்சமயம் இந்த போட்டியை நடத்த முடியாது. தற்போதைய நிலைமையில், முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும் போது, துபாய் போன்ற பொதுவான இடத்தில் இந்த தொடரை நடத்த ஏற்பாடு செய்யலாம். இந்த போட்டியால் இந்தியா - பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் உறவு துளிர்க்கவும், இரு நாட்டு உறவு மேம்படவும் வாய்ப்புள்ளது. சிக்கலான இந்த தருணத்தில் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் உதவி செய்து ஒத்தாசையாக இருக்க வேண்டும். நலநிதி போட்டி நடத்தலாம் என்று நாங்கள் சிபாரிசுதான் செய்ய முடியும். சம்பந்தப்பட்டவர்கள் தான் அது குறித்து முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அக்தர் கூறினார்.

எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி கிடையாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையே முழுமையான நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடத்தப்படவில்லை. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து