முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வினை இணையதளம் மூலம் கண்டுகளிக்க ஏற்பாடு: கோவில் இணை ஆணையர் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2020      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வினை இணையதளம் மூலம் பக்தர்கள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சார்வரி வருடம் சித்திரை பெருவிழா வரும் 25-ம் தேதி தொடங்கப்பட வேண்டிய கொடியேற்றம், தினமும் நடைபெறும் வைபவங்கள், சுவாமி திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருத்தேரோட்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து பக்தர்களின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையிலும், பக்தர்களின் ஆத்ம திருப்திக்காகவும் தலபுராணத்தின்படி திருக்கல்யாண சம்பிரதாயங்கள் மட்டும் அன்றாடம் நடைபெறும் நித்திய பூஜைகளுடன் சேர்த்து மே மாதம் 4-ம் தேதி திங்கட்கிழமையன்று காலை 9.05 முதல் 9.29 மணிக்குள் சுவாமி சன்னதி முதல் பிரகாரத்தில் அமைந்துள்ள எப்போதும் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ள சேத்தி மண்டபத்தில் நான்கு சிவாச்சார்யார்கள் மட்டும் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தி வைப்பார்கள். மேற்கண்ட இந்த நிகழ்வுகளை அனைத்து பக்தர்களும் கண்டு பிரார்த்திக்கும் வகையில் திருக்கோவில் இணையதளம் www.maduraimeenakshi.org-ல் திருக்கல்யாண நிகழ்வினை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி திருக்கல்யாண வைபவ உற்சவத்தின் போது திருமாங்கல்ய மங்கல நாண் திருமணமான பெண்கள் புதிதாக அணிந்து கொள்வதான மரபு உள்ளது. அவ்வாறு அணிந்து கொள்ள விரும்பும் தாய்மார்கள் காலை 9.05 முதல்  9.29 மணிக்குள் தங்கள் இல்லத்திலேயே பிரார்த்தித்து புதிய மங்கல நாண் மாற்றிக் கொள்ள உகந்த நேரம் என தெரிவித்து கொள்ளப்படுகிறது. இவ்வாறு கோவில் இணை ஆணையர் நடராஜன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து