ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த கூடாது - உலக சுகாதார மையம்

புதன்கிழமை, 22 ஏப்ரல் 2020      உலகம்
World Health Center 2020 04 22

கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தலை தூக்கும் என்பதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என்று உலக சுகாதார மையம் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.

உலக அளவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டிவிட்டது. பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கடந்து விட்டது. ஆனால் முதலில் கொரோனா தோன்றிய சீனாவில் இயல்புநிலை திரும்பி வருவதால் அங்கு அலுவலகங்கள் செயல்பட தொடங்கி உள்ளன.

அமெரிக்காவில் அதிகம்

ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால், அங்கும் படிப்படியாக தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு ஊரடங்கால் மக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். சில இடங்களில் ஊரடங்கை எதிர்த்து போராட்டமும் நடந்து வருகிறது. அதனால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மாகாணங்களே முடிவு செய்யலாம் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

அதையடுத்து சில மாகாணங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன. போயிங் நிறுவனமும், சில கனரக சாதன உற்பத்தி ஆலைகளும் இயங்க தொடங்கி உள்ளன.இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகளுக்கு உலக சுகாதார மையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையத்தின் மேற்கு பசிபிக் பிராந்திய இயக்குனர் டாக்டர் டகேஷி கசாய் கூறியதாவது:-

இது மெத்தனமாக இருப்பதற்கான நேரம் அல்ல. எதிர்காலத்துக்கான புதிய வாழ்க்கை பாதைக்கு தயாராக வேண்டிய நேரம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில், அரசுகள் விழிப்புடன் செயல்பட வேண்டும்.ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம். அது கொரோனா பரவலை தலைதூக்க செய்து விடும். கட்டுப்பாடுகள் சமூக விலகல் ஆகியவற்றை தளர்த்துவது படிப்படியாக நடக்க வேண்டும். மக்களின் ஆரோக்கியத்தையும், பொருளாதார வளர்ச்சியையும் சமச்சீராக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து