முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூடுதல் உணவு தானியங்களை ஒதுக்குங்கள்! மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.1000 கோடி வழங்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பேக்ஸ் மூலம் கோரிக்கை

திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக மத்திய அரசு ரூ.1000 கோடி வழங்க பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்க முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும்  தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் பி.சி.ஆர் டெஸ்ட் கிட்டுகள் அனுப்ப வேண்டும் என்றும் பிரதமருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேக்ஸ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் வரும் 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பிரதமர் மோடி, அனைத்து மாநிலம் மற்றும் யூனியன்பிரதேச முதல்வர்களுடன் வீடியோ  கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இது வரை நடைபெற்ற காணொலி காட்சிகளில் பேசாத மாநில முதல்வர்கள் நேற்றைய தினம் பிரதமருடன் பேசினார்கள். நேரமின்மை காரணமாக பிற மாநில முதல்வர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை பிரதமருக்கு பேக்ஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த அடிப்படையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்கு தனது கருத்துக்களை பேக்ஸ் மூலம் அனுப்பினார். அதில் தனது கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்துள்ளார். மேலும் தமிழகத்தில் முழுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ள முதல்வர், ஊரக பகுதிகளில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம், கட்டுமான பணிகள், நீர்ப்பாசனம் ஆகியவை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார், மேலும் மகாத்மா காந்தி திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறு செய்தால் அது ஏழைகளுக்கு உதவும் என்றும் முதல்வர் கூறியுள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் பார்த்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதையும் முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் மிக சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதனால் இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் 1,200 நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ உபகரணங்கள் வாங்க உடனடியாக மத்திய அரசு ரூ.1000 கோடி வழங்க வேண்டும்.  சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி. முன் வரியில் இருந்து ஆறு மாதம் விலக்கு அளிக்க வேண்டும்.  டிசம்பர், ஜனவரி மாத காலத்துக்கான ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். நெல் கொள்முதல் செய்யும் வகையில் உணவு தானியங்களை வழங்க ரூ.1,321 கோடியை விடுவிக்க வேண்டும். பேரிடர் நிதியிலிருந்து உடனடியாக ஆயிரம் கோடி விடுவிக்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கும் வகையில் இலவசமாக கூடுதல் உணவு தானியங்கள் வழங்க வேண்டும். கிராமப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிகள் பயன்பெறும் வகையில் உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியில் 50 சதவிகித நிதி கமிஷன் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக அரசு எடுத்த சிறப்பான நடவடிக்கையால் கொரோனா இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக குறைந்துள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமானவர்கள் விகிதம் 54 சதவீதம் என அதிக அளவில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 10,000 கொரோனா சோதனைகளை நடத்த  பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை அதிகளவில் வழங்க வேண்டும். தமிழகத்தில் 30 அரசு ஆய்வகங்கள், 11 தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மின்துறையில் நிலவும் சுமையை எளிமையாக்கும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். பெரு நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை முதலமைச்சர் பொது நிவாரணத்தில் பெற அனுமதிக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தின் தொழிலாளர்களுக்கு ஊராட்சி செயலர்கள் மூலம் பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேளாண் உற்பத்தியாளர் அமைப்புக்கு மத்திய அரசு போக்குவரத்து மானியம் வழங்க வேண்டும்.  டிசம்பர், ஜனவரி மாதத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து