முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நோயின் வலிமையை அறிந்து மக்கள் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா நோயின் வலிமையை அறிந்து மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  மேலும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனாவை தடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கொண்ட 12 சிறப்பு குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். கொரோனா எதிரொலியாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தீவிரமடைந்து உள்ளது. நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.

சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சி பகுதிகளில் 26-ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் முழு ஊரடங்கு இன்று இரவு 9 மணி வரை அமலில் உள்ளது. சேலம், திருப்பூர் மாநகராட்சிகளிலும் 26-ம் தேதி துவங்கிய முழு ஊரடங்கு நேற்று இரவு 9 மணியுடன் முடிவடைந்தது. இது போன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டு வருகிறது. கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சை, நிவாரண பணிகள் என பல்வேறு பணிகளை மேற்கொள்ள 12 சிறப்பு குழுக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அமைத்திருந்தார். இந்த குழுக்களில் மொத்தம் 40 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இதுதவிர தலைமைச் செயலாளர் தலைமையில் தனி சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டுள்ள 12 குழுக்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது, மே 3-ம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடனான இந்த ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

12 குழுக்கள் அமைக்கப்பட்டு இந்த குழுவினர் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். ஒவ்வொரு குழுவினரும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? மேலும் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என நீங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அரசு செய்ய வேண்டிய பணிகள் என்ன? மக்கள் பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனைகளை சொல்லுங்கள். துறை வாரியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். காய்கறி சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. எவ்வளவு தூரம் எடுத்து சொன்னாலும் மக்கள் அதனை பின்பற்றுவதில்லை. எவ்வளவு தான் எடுத்து சொன்னாலும் கொரோனாவின் வீரியம் தெரியாமல் மக்கள் விளையாட்டுதனமாக இருக்கிறார்கள். அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் கொரோனா தாக்கி கொத்து கொத்தாக பலியானதை டி.வி.யில் பார்க்கிறார்கள். அப்படி இருந்தும் அதனை உணரவில்லை. அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இப்போது இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. எனவே அங்கெல்லாம் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது. நமக்கு ஆரம்ப கட்டம் தான் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனாவை தடுக்க முடியும். இல்லாவிட்டால் தடுக்க முடியாது. வெளிநாட்டில் கொரோனா வீரியத்தை முதலில் அவர்கள் உணர மறுத்தார்கள். எனவே தான் அங்கு பலி எண்ணிக்கை அதிகமானது. அதன்பின் தான் இதனை உணர்ந்தார்கள். எனவே இதனை எல்லாம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். போலீசாருக்கு இது கடுமையான பணி. சவாலான பணி. இரவு பகல் பாராமல் அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். காவல்துறையினரும், உள்ளாட்சி துறையினரும் ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் வீதிவீதியாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். இதனை எல்லாம் கடைப்பிடிக்காததால் தான் கொரோனா தாக்குதல் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனை எல்லாம் மக்களிடம் உணர்த்த வேண்டும். இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது என்பதை எல்லாம் மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும். ஆகவே நோயின் வலிமையை அறிந்து மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதன் பின் ஒவ்வொரு பணிக்குழு சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. நேற்று இந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின், இன்று மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இதன் பின் மே 3-ம் தேதிக்குப் பின் ஊரடங்கை நீடிப்பதா? தளர்த்துவதா என்பது பற்றி முதல்வர் முடிவு எடுத்து அறிவிப்பார் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து