முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக தடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பல்வேறு அறிவுரைகள்- சிவப்பு பகுதிகளை பச்சை பகுதிகளாக மாற்ற வேண்டும்

புதன்கிழமை, 29 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக தடுக்க மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு யோசனைகளையும், அறிவுரைகளையும் கூறியுள்ளார். குறிப்பாக ரேசன் கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்கும் போது சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும். சிவப்பு பகுதிகளை பச்சை பகுதிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது போன்ற பல்வேறு யோசனைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஆய்வு

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆய்வு நடத்தினார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

இன்றையதினம் உலகமே பதறிப் போய் இருக்கின்ற இந்த சூழ்நிலையில், இந்தியாவிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவியுள்ளது. அதில் தமிழகத்தில் நோய் பரவலை தடுப்பதற்கு அரசு போர்க்கால அடிப்படையிலே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த வைரஸ் நோய் தடுப்பு பணியிலே ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் தங்களுடைய முழு திறமையையும் பயன்படுத்தி தங்கள் மாவட்டங்களில் நோய் பரவாமல் தடுப்பதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கிறதோ அத்தனை வழிமுறைகளையும் பின்பற்றி செயல்படுத்திய காரணத்தினால் இன்றையதினம் நோய் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கட்டுக்குள் இருக்கிறது

இன்றைக்கு அரசு வெளியிடுகின்ற வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் தங்கள் பகுதிகளில் கடைப்பிடித்ததன் காரணத்தினால் இன்றைக்கு தமிழகத்தில், சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் இந்த தொற்று நோய் பரவுதல் கட்டுக்குள் இருக்கிறது. சென்னையை பொறுத்தவரைக்கும் இது ஒரு பெரிய நகரம். இது மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதி. பலபேர் வந்து செல்லக்கூடிய பகுதியாக இருக்கின்றது. அதுமட்டுமல்லாமல், குறுகலான தெரு, அந்த குறுகலான தெருவில் அதிகமான மக்கள் வசிக்கின்ற ஒரு பகுதியாக இருக்கின்ற காரணத்தினாலே, இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் எளிமையாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது. அதுவே சென்னையிலே நோய் தொற்று அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். கிராமப்புற பகுதியாக இருந்தாலும் சரி, நகரப்பகுதியாக இருந்தாலும் சரி, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்றினால் இந்த கொரோனா வைரஸ் பரவலை முழுமையாக தடுக்க முடியும். இன்றைக்கு கிராமப்புற பகுதியிலே ஒரளவுக்கு கட்டுக்குள் வரப்பெற்றிருக்கின்றன. பேரூராட்சி, நகராட்சி பகுதிகளிலும் ஒரளவு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. மாநகராட்சி பகுதிகள் அதிக மக்கள்  வசிக்கின்ற பகுதியாக இருக்கின்ற காரணத்தினாலே இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. அதனால் தான் இந்த நோய் தொற்று பரவுவல் உயர்ந்து கொண்டு இருக்கிறது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

கலெக்டர்களுக்கு பாராட்டு

மாவட்ட ஆட்சித் தலைவர்களை பொறுத்தவரைக்கும், அரசால் அறிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி செயல்பட்ட காரணத்தினாலே, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தங்குதடையின்றி அனைவருக்கும் கிடைக்கப் பெற்றது. அதற்கு அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் எனது பாராட்டுதல்களை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு கொரோனா வைரஸ் தடுப்புப் பணி என்பது ஒரு சவாலான பணி. இன்றைக்கு உலகத்தையே அச்சுறுத்தி கொண்டு இருக்கின்ற இந்த வைரஸ் நோய்  வளர்ந்த நாடுகளிலே கூட தடுக்க முடியாத ஒரு சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட காலக்கட்டத்திலும், நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அந்தந்த மாவட்டங்களிலே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாகவும், இன்றைக்கு மருத்துவத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, இன்னும் பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டதன் விளைவாக நோய் பரவலும் தடுக்கப்பட்டது, மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் எவ்வித சிரமமும் இல்லாமல், எளிதாக கிடைக்கக்கூடிய சூழ்நிலையை நம்முடைய அதிகாரிகள் செயல்பாட்டின் காரணமாக அவர்களுக்கு உரிய நேரத்திலே கிடைக்கப் பெற்றது. இன்றைக்கு வெளிநாட்டிலே கூட பார்க்கின்றோம். வளர்ந்து வரும் நாடுகளைப் பார்க்கின்றோம், வல்லரசு நாடுகளை பார்க்கின்றோம், உணவுக்கு எவ்வளவு போராட்டம் என்று. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரைக்கும் அம்மா ( ஜெயலலிதா) இருக்கின்ற போது ஏழை, எளிய மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு மலிவு விலையிலே அம்மா உணவகத்தின் மூலமாக உணவு வழங்கப்படும் என்ற திட்டத்தை கொண்டு வந்து அது வெற்றிகரமாக நடைபெற்று வந்தது.

வரப்பிரசாதம்

இன்றையதினம், அந்த திட்டம் ஒரு வரப்பிரசாதமான திட்டம் என்று மக்கள் போற்றுகின்ற நிலையை பார்க்கின்றோம். அம்மா அவர்களால் தொடங்கப்பட்ட அம்மா உணவகத் திட்டம், இன்றைக்கு வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சோதனையான காலக்கட்டத்திலே ஏழை மக்களுக்கு மலிவு விலையிலே அம்மா உணவகத்திலிருந்து தரமான உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தினந்தோறும் 7 லட்சம்  பேர் அம்மா உணவகத்திலிருந்து உணவு உண்ணும் காட்சியை நாம்  பார்க்கின்றோம். அதேபோல சமுதாய உணவுக்கூடம் மூலமாக இன்றைக்கு உணவு தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதரவற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்களுக்கு அந்தந்த பகுதிகளிலே நாம் தாராளமாக உணவு கொடுத்து கொண்டு இருக்கின்றோம். ஆக, தமிழகத்தை பொறுத்த வரைக்கும் உணவு இல்லை என்ற நிலை இல்லாமல் நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதற்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு தொழில் செய்ய வந்தவர்கள், பணிபுரிந்து கொண்டிருக்கின்ற அந்த தொழிலாளர்களுக்கும் அரசு அறிவித்துள்ள திட்டங்களை முறையாக இன்றைக்கு செயல்படுத்தி இருக்கின்றீர்கள். அதேபோல, நம்முடைய பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக கொடுக்க வேண்டிய அத்தியாவசியப் பொருட்கள் முழுமையாக இன்றைக்கு தடையில்லாமல் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. 

மே மாத பொருட்களை வழங்க வேண்டும்

மேலும், மே மாதத்திற்கு உண்டான விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் அனைத்தும் அம்மாவுடைய அரசு வழங்க இருக்கின்றது. அதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உரிய முறையிலே அவர்களுக்கு வழங்க வேண்டும். நியாய விலைக் கடைகளிலே பொருட்களை வழங்குகின்ற போது, சமூக இடைவெளியை பின்பற்றி வழங்குவதற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். பல்வேறு இடங்களிலே இந்த ரேஷன் பொருட்களை வழங்குகின்ற போது சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டமாக வாங்கக்கூடிய காட்சியை நாம் பார்க்கின்றோம். அது தவிர்க்கப்பட வேண்டும்.

மக்கள் கடைப்பிடிப்பதில்லை

அதேபோல, காய்கறிகள் வாங்குகின்ற போது, மார்க்கெட்டிற்கு மக்கள் செல்கின்றபோது அங்கேயும் இந்த சமூக இடைவெளியை பின்பற்றும் நடைமுறையை அவர்கள் கடைபிடிப்பதில்லை. ஆகவே, காய்கறி மார்க்கெட்டிற்கு செல்லும்போதும், அங்கேயும் சமூக இடைவெளியை பின்பற்றி அந்த காய்கறிகளை வாங்கக்கூடிய சூழ்நிலையை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உருவாக்க வேண்டும். இதற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இடத்திலே பதிவு செய்தவர்கள் இருக்கிறார்கள். அந்தந்த பகுதிகளிலே யார் பதிவு செய்திருக்கிறார்களோ அவர்களை வைத்து இந்த பணியை மேற்கொள்ளலாம். உள்ளாட்சியை பொறுத்தவரைக்கும், நோய் பரவலை தடுக்க தினந்தோறும் நகர பகுதிகளிலே கிருமி நாசினி தெளிக்க வேண்டும். இது முறையாக தெளித்தால் தான் இந்த நோய் பரவலை தடுக்க முடியும். அதையும் தவறாமல் நீங்கள் செயல்படுத்த வேண்டும்.  

கழிப்பறைகளை சுத்தம் செய்ய வேண்டும்

 நகரப் பகுதிகளில் இருக்கின்ற கழிப்பறைகள் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் பொதுமக்கள் பலர் இந்த கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். அங்கே எந்தவித தொற்றும் ஏற்படாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று ரேஷன் கடையில் பொருட்களைப் பெற ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கன் வழங்கப்படுகின்றபொழுது இந்த தேதியில் இந்த நேரத்தில் தான் நியாய விலைக் கடைக்கு வரவேண்டும் என்ற செய்தியைச் சொல்லி அந்த டோக்கனை வழங்க வேண்டும். கிராமங்களில் படிக்காதவர்கள் பலர் இருக்கின்றனர். நீங்கள் டோக்கன் மட்டும் கொடுத்து விட்டு வந்துவிட்டால்,  எந்த நேரத்தில் வரவேண்டும் என்று அவர்களுக்கு தெரியாது. ஆகவே, டோக்கன் பெற்றுவிட்டோம் என நினைத்து, உடனடியாக நியாயவிலைக் கடைக்கு சென்று விடுவார்கள். அதனால் அங்கே கூட்டம் கூடிவிடுகிறது. டோக்கன் கொடுக்கின்ற நோக்கமே முறையாக, தேதி வாரியாக, குறிப்பிட்ட நேரத்தில் அந்த பொருட்களை அவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் கொடுக்கப்படுகிறது. எனவே, அந்த ரேஷன் கடை ஊழியர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்குகின்ற போதே எப்பொழுது வந்து பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக சொல்லி அவர்களுக்கு டோக்கனை வழங்கினால், அந்த குடும்ப அட்டைதாரர்கள், முதியவர்களாக இருப்பார்கள், படிக்காதவர்களாக இருப்பார்கள், அவர்கள் அதை தெரிந்து கொண்டு அந்த நேரத்திற்கு, அந்த தேதிக்கு வந்து பொருட்களைப் பெற்றுக் கொள்வார்கள். அதை செய்தால் கூட்டத்தை தவிர்க்க முடியும். அதேபோல, மண்ணெண்ணை வழங்குகின்ற காலத்தையும் நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். ஒருசில இடங்களில் மண்ணெண்ணெய் இல்லாமல் இருந்தால், பிறகு மண்ணெண்ணை வந்தால், அதற்கும் டோக்கன் வழங்கி மக்களை முறைப்படுத்தி, சமூக இடைவெளியை கடைபிடித்து அவர்களுக்கு மண்ணெண்ணையை வழங்க வேண்டும்.

வேளாண்மைக்கு முழு விதிவிலக்கு

வேளாண்மையைப் பொறுத்தவரைக்கும் முழு விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் பணிக்கு செல்கின்றவர்களை எந்த இடத்திலும் யாரும் தடுக்க வேண்டாம். அந்தப் பணி முழுமையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அது தொடர்ந்து நடைபெற வேண்டும். விவசாயி உற்பத்தி செய்த விளைபொருட்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்வதற்கு நீங்கள் எவ்வித தடையும் செய்யக் கூடாது. அவர்கள் ஏற்றிச் செல்கின்ற வாகனத்தை மறிக்கக்கூடாது. அவர்கள் விளைவித்த பொருட்களை ஆங்காங்கே இருக்கின்ற மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும். அதே போல விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறி, பழங்களை ஆங்காங்கே இருக்கின்ற நம்முடைய குளிர்பதனக் கிடங்குகளில் வைப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். அதேபோல் விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற தானியங்களை வைப்பதற்கு அம்மா இருக்கின்றபொழுதே தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பகுதிகளிலே குடோன் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த குடோனிலே வைத்து அவை பாதுகாப்பாக இருப்பதற்கு உதவி செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, அந்த விவசாயிகள், அந்த குடோனில் வைக்கப்படுகின்ற தானியங்களுக்கு தற்பொழுது விற்பனை ஆகின்ற விலையில் பாதி அளவிற்கு குறைந்த வட்டியில் கடன் கிடைப்பதற்கு விருப்பப்பட்ட விவசாயிகளுக்கு வழிவகை செய்யலாம்.

விவசாயிகளுக்கு உதவுங்கள்

விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளை தாராளமாக மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யலாம். அதற்கும் நீங்கள் உதவி செய்ய வேண்டும். விவசாயிகள் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் அனைத்துக்குமே எவ்வித தடையும் இல்லாமல் இயங்குவதற்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். குறிப்பாக, அரிசி ஆலை, எண்ணெய் மில், ஜவ்வரிசி ஆலை, முந்திரி பதப்படுத்தும் ஆலை இப்படி விவசாயத்தைச் சார்ந்த தொழில்கள் எவ்விதத்திலும் பாதிக்காமல் இயங்குவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தை கிராமப்புறங்களில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்பதற்காக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அந்த 100 நாள் வேலைத் திட்டத்தை நீங்கள் அமல்படுத்தலாம். 100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்துகின்ற பொழுது, அங்கேயும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அவசியம் முகக்கவசம் அணிந்து அந்தப் பணியிலே தொழிலாளர்களை ஈடுபடுத்த வேண்டும். 50 தொழிலாளர்கள் இருந்தால், ஒரே இடத்தில் வேலைக்கு வரலாம், 100 தொழிலாளர்கள் இருந்தால் இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் அதிகமான பணியாளர்கள் அந்த ஊராட்சியிலே இருந்தால் அதை மூன்று குழுவாக பிரித்து அவர்களுக்குத் தேவையான பணிகளை வழங்க வேண்டும். ஏனென்றால், அனைவரும் ஒரே இடத்தில் பணி செய்தால் அங்கே சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதை அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அங்கே வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஊராட்சியிலும் ஊராட்சி செயலாளர்கள் இருக்கிறார்கள், அவர்கள் அதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிபவர்கள் 55 வயதிற்கு மேல் இருந்தால் அவர்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்று அவருக்கு ஏக்கம் இருந்தாலும், அவரது குடும்பத்திலே தகுதியானவர்கள் யாரேனும் இருந்தால், அவரை அந்த பணியில் அமர்த்தலாம்.

யாரும் வெளியே வரக்கூடாது

தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து யாரும் வெளியில் வரக்கூடாது, அந்தப் பகுதிக்கு யாரையும் செல்ல அனுமதிக்கக் கூடாது. அதை காவல்துறை அதிகாரிகள் அதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல், தடை செய்யப்பட்ட பகுதியில் தினந்தோறும் இரண்டு முறை கிருமி நாசினி தொடர்ந்து தெளிக்கப்பட  வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு தேவையான உபகரணங்கள் கிடைப்பதை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்கப்படுகின்றனவா என்பதையும் நீங்கள் அடிக்கடி சோதனை செய்து, தரமான உணவு மக்களுக்குக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.  இப்பொழுது கோடை காலமாக இருக்கின்ற காரணத்தினாலே கிராமப்புறம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளில் மக்களுக்கு தடையில்லாமல் குடிதண்ணீர் கிடைக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் கவனமாக கண்காணிக்க வேண்டும். இந்நோயை பொறுத்தவரைக்கும், மத்திய அரசால் சிவப்பு பகுதி, ஆரஞ்சு பகுதி, பச்சை பகுதி என்று மூன்றாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

படிப்படியாக தொழில் துவங்கும்

சிவப்பு பகுதி என்பது அதிகமாக மக்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதி. ஆரஞ்சு பகுதி என்பது குறிப்பிட்ட அளவு தான் அந்த நோய் தொற்று உள்ள பகுதி. பச்சை பகுதி என்பது யாரும் நோயால் பாதிக்கப்படாத பகுதி. இதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கவனமாக எடுத்துக் கொண்டு, எந்த மாவட்டத்தில் பச்சை பகுதி இருக்கின்றதோ, அந்தப் பகுதியில் படிப்படியாக தொழில் துவங்குவதற்கு அரசு உங்களுக்கு சரியான உத்தரவை வழங்கும். அதை பின்பற்றி, நீங்கள்  அந்த பச்சை பகுதியிலே தொழில் துவங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம், அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கலாம்.  இப்பொழுது சிமெண்ட், சர்க்கரை ஆலைகள், ஜவ்வரிசி ஆலைகள், ஸ்டீல் தொழிற்சாலை, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு ஆகிய தொழிற்சாலைகள் துவங்குவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கின்றது. ஆகவே, சிமெண்ட், சர்க்கரை ஆலைகள், ஜவ்வரிசி ஆலைகள், ஸ்டீல் தொழிற்சாலை, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு ஆகிய தொழிற்சாலைகளுக்கு இப்பொழுது தடை கிடையாது. அதற்கெல்லாம் அனுமதி கொடுக்கலாம். ஆனால், தடை செய்யப்பட்ட பகுதிகளில் அனுமதி கொடுக்க வேண்டாம்.அதே போல, இன்று ( நேற்று )  காலை 6 மணியிலிருந்து 1 மணி வரை தொடர்ந்து ஊரடங்கு கடைபிடிக்கப்படுகின்றது. அப்போது உணவகங்களில் அவர்கள் பார்சலுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாம். பேக்கரி கடைகள் பார்சல் மட்டும் தான் கொடுக்க வேண்டும். அனைத்து பகுதி மக்களும் அவர்கள் இடத்திலேயே காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் வழிவகை செய்ய வேண்டும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும். தேவையில்லாமல் அனாவசியமாக வெளியில் செல்கின்றவர்களை கட்டுப்படுத்த வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து நம் மாநிலத்திற்கு வருகின்ற எல்லைகளை இன்றைக்கு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். ஏன் என்றால் அது மிக மிக முக்கியம். நோய் தொற்றுள்ளவர்கள் யாராவது நம் மாநிலத்திலே நுழைந்துவிட்டால் எளிதாக நோய் பரவிவிடும். ஆகவே நம்முடைய மாநில எல்லையில் காவல்துறை அதிகாரிகள் கவனமாக கண்காணித்து நம்முடைய எல்லைக்கு வருகின்றவர்களை முழுமையாக பரிசோதனை செய்து தான் அனுமதிக்கப்பட வேண்டும். தேவையான அனுமதி சீட்டு பெற்றிருந்தால் அவர்களை அனுமதிக்கலாம். அவர்கள் அனைவரையும் பரிசோதனை செய்ய வேண்டும். அங்கேயே ஒரு மருத்துவ குழு இருக்கும். அங்கே பரிசோதனை செய்து தான் அவர்களை மாநிலத்திற்குள் அனுமதிக்க வேண்டும்.

முறையான இ - பாஸ் தரவேண்டும்

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இ - பாஸ் கொடுக்கின்றீர்கள். அது முறையாக வழங்கப்பட வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எல்லா மருத்துவமனைகளிலும் தேவையான அளவிற்கு மருத்துவ உபகரணங்கள் இருக்கின்றதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதையெல்லாம் நம்முடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் சரியான முறையிலே பின்பற்றி வந்தாலும், மேலும் சிறப்பான முறையிலே அரசால் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளை பின்பற்றி இந்த கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு முழுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கிறேன். ஆகவே, இன்றைக்கு சிவப்பு பகுதிகளை ஆரஞ்சு பகுதிகளாக மாற்ற வேண்டும். ஆரஞ்சு பகுதிகளை பச்சை பகுதிகளாக மாற்ற வேண்டும். ஆகவே, அப்படி படிப்படியாக மாற்றினால்தான் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.  அப்படி இயல்பு நிலைக்கு வந்தால்தான், தொழிற்சாலை இயங்க முடியும், நாட்டு மக்கள் இயல்பாக தங்களுடைய பணிகளை மேற்கொள்ள முடியும். அதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கடுமையாக தங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறீர்கள். இருந்தாலும் மேலும் இந்த நோய் பரவாமல் தடுத்தால் தான் இயல்பு நிலைக்கு வரக்கூடிய சூழ்நிலை இருக்கின்ற காரணத்தினாலே மேலும் கூடுதலாக கவனித்து அரசு சொல்கின்ற வழிமுறைகளை பின்பற்றி தாங்கள் பணி செய்ய வேண்டும் என்று அன்போடு இந்த நேரத்திலே கேட்டுக் கொள்கின்றேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து