முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, மதுரை, கோவையில் முன்பிருந்த ஊரடங்கு தொடரும்- இன்று மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும்

புதன்கிழமை, 29 ஏப்ரல் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை, மதுரை, கோவையில் நேற்று வரை அமலில் இருந்த முழுமையான ஊரடங்கு நீட்டிக்கப்படவில்லை. இந்த மாநகராட்சி பகுதிகளில் முன்பிருந்த நிலைப்படியே ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்று தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:-
சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று  மாநகராட்சிப் பகுதிகளில், அமலில் இருக்கும் முழு ஊரடங்கு முடிவடையும்  நிலையில், இன்று முதல் 26.4.2020 க்கு முன்பு இருந்த நிலைப்படி ஊரடங்கு தொடரும்.  எனினும், 30.4.2020 (வியாழக்கிழமை) அன்று  மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி, பழங்கள் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை விற்கும்  கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

1 ம் தேதி முதல் மதியம் 1 மணி வரை மட்டும்

1.5.2020 (வெள்ளிக்கிழமை) முதல் மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.  கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய் தொற்று என்பதால், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவசரம் காட்டாமல், நிதானமாக, பொறுமை காத்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து,  முகக் கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கூறியபடி பொதுமக்கள் இன்று கடைகளுக்கு செல்லும் போது அவசரப்படாமல் நிதானமாக சென்று சமூக இடைவெளிவிட்டு பொருட்களை வாங்க  வேண்டும். அவ்வாறு இடைவெளிவிடாவிட்டால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு வைரஸ் தொற்று பரவக்கூடும். வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் கடைகளுக்கு சென்று கூட்டம், கூட்டமாக நிற்காமல் இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். அப்போது தான் அரசு சொல்கிறபடி இந்த நோய் தொற்று பரவுவதை தடுக்க முடியும். இல்லாவிட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு கொண்டே இருக்கும். பிறகு மக்கள் தான் அவஸ்தைப்பட நேரிடும். எனவே தனித்திரு, விலகிஇரு என்ற அரசு சொல்படி மக்கள் நடக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து