முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு - எரிபொருள் கிடங்குகள் சேதம்

திங்கட்கிழமை, 11 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

திரிபோலி : லிபியா விமான நிலையம் மீது குண்டு வீச்சு தாக்குதல் நடந்தது. இதில், விமானங்களும், எரிபொருள் கிடங்குகளும் சேதம் அடைந்தன. 

கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து லிபியாவில் குழப்பம் நிலவி வருகிறது. அப்போது நடந்த உள்நாட்டு கலவரத்தில், நீண்டகால சர்வாதிகாரியான கடாபி, ஆட்சியை விட்டு நீக்கப்பட்டார். பிறகு அவர் கொல்லப்பட்டார். பின்னர், கிழக்கு, மேற்கு என்று இரு பிரிவாக லிபியா உடைந்தது. தலைநகர் திரிபோலி உள்ளிட்ட மேற்கு பகுதிகள், ஐ.நா. ஆதரவு பெற்ற நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நிர்வாகத்தை துருக்கி, கத்தார் ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன.

கிழக்குப் பகுதி, ராணுவ உயர் அதிகாரி காலிபா ஹிப்டருக்கு விசுவாசமான படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களை ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் ஆதரிக்கின்றன. தலைநகர் திரிபோலியை கைப்பற்றும் நோக்கத்தில், கடந்த ஓராண்டாக கிழக்கு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உலக நாடுகள் வற்புறுத்தியும் சமாதானம் உருவாகவில்லை.

இந்நிலையில், தலைநகர் திரிபோலியில் இயங்கி வரும் ஒரே விமான நிலையமான மிடிகா சர்வதேச விமான நிலையம் மீது கிழக்குப் பகுதி படைகள் சரமாரி குண்டு வீச்சு தாக்குதல் நடத்தின. பீரங்கியால் தாக்குதல் நடத்தின. இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விமானங்கள் சேதம் அடைந்தன. அதில் ஒரு விமானம், ஸ்பெயின் நாட்டில் சிக்கித்தவிக்கும் லிபிய மக்களை அழைத்து வருவதற்காக புறப்பட தயார்நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த தாக்குதலில் விமான எரிபொருள் கிடங்குகளும் தீப்பிடித்து எரிந்தன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதேசமயம், திரிபோலியின் மற்ற பகுதிகளிலும் கிழக்குப் படைகள் தாக்குதல் நடத்தின. ஆங்காங்கே ஏவுகணை தாக்குதல் சத்தம் கேட்டது.

குடியிருப்பு பகுதிகளிலும் ஏவுகணைகள் விழுந்தன. இதில், 3 பேர் பலியானார்கள். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு கிழக்குப் பகுதி படைகள் மீது ஐ.நா. ஆதரவு தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து