முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கடம்பூர் ராஜூவுடன் திரைத்துறையினர் சந்திப்பு

திங்கட்கிழமை, 18 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அமைச்சர் கடம்பூர் ராஜூவை நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்தார்கள்.

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஏற்கனவே தாங்கள் அளித்த கோரிக்கையான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களும், சின்னத்திரை தயாரிப்பாளர்களும், தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ளுவதற்கு அனுமதி வழங்க கோரியதை தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அனுமதி வழங்கியதற்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள். 

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள்,  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரிடம் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்புக்கான  அரசின் உத்திரவால் தமிழ்நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் திரைப்பட படப்பிடிப்பினை துவங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டுவது தொடர்பான மனுவினையும்  அளித்தார்கள். செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இக்கோரிக்கையினை தமிழக முதல்வரின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்வதாக தெரிவித்தார். 

இந்நிகழ்வில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் பி.சின்னப்பன், திரைப்படத் தயாரிப்பாளர்கள் டி.சிவா, தேனப்பன், சுரேஷ் காமாட்சி, ஜி.தனஞ்சேயன், விடியல் ராஜ், நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களுமான மனோபாலா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சரிடம் , கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கத்தில் ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்காக, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் (பெப்சி) வெவ்வேறு சங்கத்தின் சார்பாக தலா ரூ.50,000/- வழங்கப்பட்டு, 20 சங்கங்களின் மூலமாக ரூ.10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம்) மற்றும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ஒவ்வொருவரும் ரூ.1/- வீதம் வழங்கிய நிதி ரூ.25,000/- என மொத்தம்  ரூ.10,25,000/-த்திற்கான காசோலையினை தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார். 

அப்போது  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அவர்கள் வழங்கிய நிதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதி கணக்கில் சேர்க்கப்படும் என தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார், பெப்சியின் துணைத் தலைவர் மற்றும் இசையமைப்பாளர் தினா மற்றும் பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும், அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் தலைமையில், கொரோனா வைரஸ்  நோய் தொற்று  தடுப்புக்கான  அரசின் உத்தரவால் தமிழ்நாட்டில் மூடப்பட்டிருக்கும் திரையரங்கங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டி மனுவினை அளித்தனர்.

அப்போது அமைச்சர் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை மனுவினை பெற்று, இக்கோரிக்கையினை தமிழக முதல்வரின் கனிவான கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆவன செய்வதாக தெரிவித்தார். இந்நிகழ்வில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் டாக்டர் எஸ்.ஹரிகோவிந்த் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுப்பு, வெங்கடேஷ், மதி மற்றும் ரூபன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து