முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

திங்கட்கிழமை, 18 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மேலும் மான்யம் வழங்குவதை மாநில அரசிடம் விட்டு விட வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.

கடும் எதிர்ப்பு

விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக நேற்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் ஐந்து முக்கிய பொருளாதார நிவாரண அறிவிப்புகளை வெளியிட்ட பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகளில் தொற்று நோய் தடுப்பு சிகிச்சைக்கான பிளாக்குகளை (கட்டிடம்) கட்டுவதற்கும், வட்டார அளவில் பொது சுகாதார ஆய்வுக் கூடங்களை அமைப்பதற்கும் கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும்.

பல்வேறு துறைகளுக்கும் தேவையானபடி நிதி நிலையைத் தாங்கிப் பிடிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை வரவேற்கிறோம். மாநில அரசுகளுக்காக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கூடுதல் கடன் வாங்கும் வரம்புகள் சம்பந்தமாக தங்களது கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். மத்திய அரசின் சமீபத்திய 5 புது அறிவிப்புகள் இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க உதவும் என்று நம்புகிறேன்.

வருவாய் குறைவு

தற்போது ஊரடங்கு காரணமாக அரசு வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. கூடுதல் செலவினங்களும் இருப்பதால் பெறப்படும் மாநில அரசின் கடன், மாநிலங்களின் எதிர்கால வரி வருவாயிலிருந்து திருப்பிச் செலுத்தப்பட வேண்டும். மாநிலங்கள் பெறும் கடன் வரம்பை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ள அதே நிலையில், கூடுதல் கடன் தேவைகளுக்கு தேவையற்ற நிபந்தனைகளை இணைப்பது நியாயமற்றது என்றே தோன்றுகிறது. இது மாநில அரசின் அத்தியாவசியத் தேவைகளை பெறுவதில் சிக்கலை உருவாக்கும். எனவே இதுகுறித்து ஒவ்வொரு மாநில அரசுடன் மத்திய அரசு விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

அதேபோன்று நான்கு முக்கிய துறைகளில், மத்திய அரசின் எந்தவொரு நிதியுதவியையும் எதிர்பார்க்காமல் தமிழக அரசு ஏற்கனவே சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக மின் பகிர்மானத்தில் சீர்திருத்தங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. மேலும், மானியம் வழங்குவதை மாநில அரசிடமே விட்டுவிட வேண்டும். மத்திய அரசின் அறிவிப்புகளில் இந்த திருத்தங்களை மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். கடுமையான நிதி பற்றாக்குறை உள்ள இந்த நேரத்தில் அத்தியாவசிய செலவினங்களை பூர்த்தி செய்ய மத்திய அரசு உதவும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து