முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்பன் சூறாவளி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

திங்கட்கிழமை, 18 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  ஆம்பன் சூறாவளி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை என்று அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சென்னை எழிலகத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் அம்பன் சூறாவளி புயல் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முதலமைச்சரின் அறிவுரையின் படி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு இணைந்து இந்த தென்மேற்கு பருவமழை தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுக்கு வருவாய் நிருவாக ஆணையர் எவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று (நேற்று) காலை 6.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கடந்த 16.5.2020 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து வலுப்பெற்ற தீவிர சூறவளிப்புயல் “ஆம்பன்” தற்போது அதிதீவிர சூறாவளிப் புயலாக மாறி தெற்கு வங்காள விரிகுடாவில் மத்தியப் பகுதியிலிருந்து வடக்கு வடகிழக்காக மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்கின்றது.

அதிகாலை 2.30 மணிக்கு ஒடிசா மாநிலத்தில் உள்ள பாராதீப் துறைமுகத்திலிருந்து தெற்கே 820 கி.மீ தூரத்திலும் மேற்கு வங்காளத்தில் உள்ள திகா என்ற இடத்திலிருந்து தெற்கு தென்மேற்காக 980 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. இது மேலும் வடக்கு வடகிழக்காக நகர்ந்து வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் மேற்கு வங்காளத்தை கடக்கும்.

கடல் சீற்றம் மத்திய, தெற்கு மற்றும் வடக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் கடல் மிகவும் சீற்றத்துடனும் அலைகள் அபாயகரமான அளவில் உயர்ந்து காணப்படும்.

மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்காள விரிகுடா பகுதிக்குச் செல்ல வேண்டாம். தமிழகத்தை பொறுத்தவரை உயர்ந்தபட்ச வெப்பநிலை குறித்து எச்சரிக்கை ஏதும் இல்லை. கொரோனா வைரசுக்காக சமூக இடைவெளி பொதுமக்களிடையே கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் நிவாரண முகாம்களை அதிகப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக முதல்வரின் அறிவுரையின் படி தென்மேற்கு பருவமழை இடி, மின்னல் பாதுகாப்பு நடவடிக்கைகள், உயிரிழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்த அவசர கட்டுப்பாட்டு மையம் மூலம் வருவாய் நிர்வாக ஆணையர் மூலம் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த புயல் தொடர்பான சேட்டலைட் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த புயல் தொடர்பாக எந்த பாதிப்பும் தமிழகத்திற்கு இல்லை என தெரியவருகிறது.

இருந்த போதிலும் இந்திய வானிலை மையத்தோடு இணைந்து நாங்கள் இப்புயல் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இதன் தொடர் நடவடிக்கையாக அன்றாட நிலவரங்கள் பொதுமக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்படும். கொரோனா தொடர்பாக சிறப்பாக பணியாற்றிவரும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பாக தென்மேற்கு பருவமழை தொடர்பாகவும் அறிக்கைகள் பெறப்பட்டுவருகின்றன. 

இவ்வாறு அவர் கூறினார்.

இப்பேட்டியின்போது வருவாய் நிருவாக ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை ஆணையர் டி.ஜெகந்நாதன் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து