முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே ஆம்பன் புயல் கரையை கடந்தது : மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன

புதன்கிழமை, 20 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

கொல்கத்தா : மேற்கு வங்கத்திற்கும், வங்கதேசத்திற்கும் இடையே ஆம்பன் புயல் கரையை கடந்தது. இதனால் அப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த கன மழை பெய்தது. மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. புயல் கரையை கடந்ததும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டனர். 

வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு - வடகிழக்கு நோக்கி நேற்று முன்தினம் மேற்கு வங்காளத்தை நெருங்கிய போது அதி தீவிர புயலாக வலுவிழந்தது. நேற்று காலை புயல் மேலும் நகர்ந்து, பூரி - கொல்கத்தா இடையே வங்கக் கடலில் மையம் கொண்டிருந்தது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடலோர பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில், ஆம்பன் புயல் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து,

தீவிர புயலாக வலுவிழந்து, நேற்று பிற்பகல் மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்கதேசத்தின் ஹதியா தீவுகள் பிற்பகல் 2.30 மணியளவில் கரை கடக்கத் தொடங்கியது. கரைகடக்கும் நிகழ்வு கிட்டத்தட்ட 4 மணி நேரம்  நீடிக்கும் என்றும், அதன்பின்னர் புயல் வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

புயல் கரை கடக்கத் தொடங்கியதும் மணிக்கு 160 கிமீ முதல் 170 கிமீ வரை வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் மழையும் படிப்படியாக அதிகரித்தது. புயல் கரையை கடந்த பிறகு,  வடக்கு - வடகிழக்கு நோக்கி நகர்ந்து, கொல்கத்தாவுக்கு அருகில் செல்லக் கூடும் என்றும் இதனால் பலத்த மழை பெய்து, நகரின் தாழ்வான பகுதிகளில் கடுமையான சேதம் மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. 

ஆம்பன் புயல் கரையை கடந்து வந்த நிலையில், தேசிய பேரிடர் மேலாண் படை தலைவர் எஸ்.என். பிரதான் கூறும் போது, மேற்கு வங்காளத்தில் இருந்து 5 லட்சத்திற்கும் கூடுதலானோர் மற்றும் ஒடிசாவில் இருந்து ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 640 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டு உள்ளனர் என தெரிவித்து இருந்தார். 

பானி புயலில் ஏற்பட்ட அனுபவத்தினால், மரம் வெட்டும் கருவிகள், மின்கம்பங்கள் வெட்டும் கருவிகள் ஆகியவற்றை அனைத்து குழுக்களும் தயார் நிலையில் வைத்துள்ளன.  தேவைப்பட்டால் அவை உபயோகிக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக உருவெடுத்து அதன்பின் அதிதீவிர புயலாக உருமாறி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே கரையை கடக்க தொடங்கியது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 165 கி.மீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக மரங்களும், மின் கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. இதையடுத்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

புயல் நிலவரத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணித்தார். இந்த புயல் ஒடிசா மாநிலத்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலத்த காற்று வீசியதால் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. ஏற்கனவே இந்திய மக்களை கொரோனா வைரஸ் தொற்று படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநில மக்கள் ஆம்பன் புயலாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் ஒரு வேதனைக்குரிய விஷயம். 

தமிழகத்தில் பாதிப்பில்லை

இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் கடல் சீற்றம் பல இடங்களில் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. திருவள்ளூர் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்தன. திருவெற்றியூரிலும் அதே நிலைதான். குறிப்பாக காசிமேட்டு பகுதியில் கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் காணப்பட்டன. புதுச்சேரியிலும் கடல் சீற்றம் காணப்பட்டது. இருந்தாலும் மீனவர்களின் படகுகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. தமிழகத்தில் நேற்று பல நகரங்களில் வெயில் வெளுத்து வாங்கியது. 

இந்த நிலையில் சென்னையில் அனல்காற்று அதிகமாக வீசியதால் சாலைகளில் மக்களால் செல்ல முடியவில்லை. வாகனங்களில் சென்றவர்கள் இந்த வெப்பக்காற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த வெப்பக்காற்றும் மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை மண்டல வானிலை துணை இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து