முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் : அமைச்சர் தங்கமணி தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

நாமக்கல் : நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஒட்டமெத்தையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பள்ளிபாளையம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தையும் குமாரபாளையம் அருகே உள்ள வெப்படையில் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தையும் அமைச்சர் தங்கமணி நேற்று தொடங்கி வைத்தார். மேலும், ரூ.30 லட்சம் மதிப்பில் குமாரபாளையம் அம்மா உணவகத்தின் விரிவாக்கப்பட்ட கூடுதல் கட்டிடத்தையும், ஆவத்திப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டிடப் பணிகளை அடிக்கல் நாட்டியும் அவர் தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து வெப்படையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.தங்கமணி கூறியதாவது, 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் புதிய மின இணைப்பு பெற்றவர்களுக்கு மின் மீட்டர் பொருத்துவதாக, ஒரு தொலைக்காட்சியில் செய்தி வெளியானது தவறான தகவலாகும். தமிழகத்தை பொறுத்தவரை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த இலவச மின்சாரத் திட்டம் முழுமையாக தொடர வேண்டும் என்பது தான் தமிழக முதலமைச்சரின் எண்ணமாகும். மத்திய அரசு உத்தேசித்துள்ள புதிய மின் திருத்தச் சட்டத்தில் இலவச மின்சாரம் பாதிகப்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் இலவச மின்சாரத்தில் எந்தவிதத்திலும் ரத்து செய்யக் கூடாது என்பது தான் தமிழக அரசின் கொள்கையாகும். ஏற்கனவே விவசாயிகளுக்கு மின் இணைப்புக்கு தட்கல் திட்டத்தில் மட்டும் மின் மீட்டர் பொருத்தப்பட்டது. அதையும் தற்பொழுது முதலமைச்சர் மீட்டர் பொருத்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். எனவே பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத பதட்டத்தை அந்த தனியார் தொலைக்காட்சி ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.   

ஒரு மின்மாற்றியில் லோடு திறன் இருந்தால் மட்டுமே, ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப புதிதாக மின்மோட்டாரின் குதிரை சக்தித் திறன் அதிகரிக்க மின்வாரியம் மனுக்களை பெற்று வருகிறது. ஆழமான நீர்மட்டம் கொண்ட கிணற்றில் இருந்து அதிக குதிரைத்திறன் சக்தியுள்ள மின் மோட்டாரை பயன்படுத்த ஹெச்.பி ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இது முற்றிலும் விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் மட்டுமே செயல்படுத்தப்படும். வருகின்ற ஜூன் மாதம் 30-ம் தேதி வரை விவசாயிகள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் அளிக்கலாம். இந்தத் திட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி கட்டணம் பெறுவது கிடையாது. ஆனால், இந்தத் திட்டத்தில் விவசாயிகளை கட்டாயப்படுத்தி டெபாசிட் கட்டணம் பெறுவதுபோல தவறான தகவலை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. ஒரு மின் இணைப்புக்கு மின்சாரம் அளிக்க மின்வாரியத்திற்கு பல லட்சங்கள் செலவு ஆகிறது. இருந்தபோதிலும், தமிழக அரசு, விவசாயிகள் பாதிக்கின்ற வகையில் எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வராது.

மாநில அரசின் உரிமையை எந்த நேரத்திலும் முதல்வர் விட்டுக் கொடுக்க மாட்டார். இலவச மின்திட்டத்தில் எந்த சமரசமும் கிடையாது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருவது ரத்து செய்யப்பட மாட்டாது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரந்து வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள எந்த விவசாயிகளும் இலவச மின்சாரம் குறித்து கவலைப்பட தேவையில்லை. மின்வாரியத்தில், கேங்மேன் தேர்வு நடைபெற்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஏற்கனவே, சட்டசபையில் அறிவித்தபடி, மேலும் 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்புவது குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படும்.   

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதிகளில் நூற்பாலைகள் அதிகம் உள்ளதால் மின்சாரத் தேவை, பயன்பாடு அதிகமாக உள்ளது. நீண்டநாள் கோரிக்கையாக இப்பகுதி மக்கள் பயன் பெறும் வகையில் மேட்டூர் அல்லது சங்ககிரி சென்று சேவைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பொதுமக்களுக்கு தற்போது பள்ளிபாளையம் மற்றும் வெப்படை பகுதியில் இந்த அலுவலகங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது மூலம் அவர்களுக்கு மின்சார சேவைகள் உடனடியாக கிடைக்கும். காலதாமதமின்றி இப்பணிகள் நடத்தி முடிக்க முடியும். இந்த செயற்பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள் புதிதாக கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் இப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட நூற்பு ஆலைகள் பயன்பெறும். மக்கள் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசு என்பதற்கு இதுவே உதாரணம் ஆகும். 

தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதில் ஊழல் நடந்திருப்பதாக கூறுவது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஆகும். மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகம், காவல் துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகள் சார்பிலும், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மக்களை சந்தித்து கொரோனா நிவாரண பொருட்களை வழங்கியும் கொரோனா தடுப்பு பணிகளிலும் ஈடுபட்டு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மக்களை சந்திக்காமல் கொரோனா பணிகள் குறித்து  தவறான தகவலை அளித்து வருகிறார்.  மக்கள் பிரதிநிதி மக்கள் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டுமே தவிர இதுபோன்ற தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது. பிற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தமிழக முதல்வர் பணிகளில் முழு வீச்சில் மேற்கொண்டு வரும் நேரத்தில் அரசியல் செய்வதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சித் தலைவர் பதவி சார்ந்தவர்கள் சுமத்தி வருகின்றனர் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

இந்த நிகழ்சிகளில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ்,  தமிழ்நாடு மின்சார வாரிய ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் வரத. சந்திரசேகரன், மேட்டூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து