முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈகை திருநாளில் உலகில் அமைதி, அன்பு நிலவட்டும் : முதல்வர் எடப்பாடி ரமலான் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 24 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஈகை திருநாளில் உலகில் அமைதி, அன்பு நிலவட்டும் என்று இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை   தெரிவித்துக் கொள்கிறேன். இறை அருளைப் பெறுவதற்காக புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பிருந்து, உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை மக்களுக்கு உணவளித்து, வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று  இறைவனை தொழுது, ரம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள். இஸ்லாமியப் பெருமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,895 பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்கியது, இஸ்லாமியப் பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது, 

தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டு நிர்வாக மானியத்தை 2 கோடி ரூபாயிலிருந்து 2.50 கோடி ரூபாயாக உயர்த்தியது, ஏழ்மை நிலையிலுள்ள ஆதரவற்ற, கணவரால் கைவிடப்பட்ட, வயது முதிர்ந்த முஸ்லீம் மகளிர் பயனடையும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு இணை மானியம் வழங்கியது, உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தியது,

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு வழங்கப்பட்டு வரும் நிர்வாக மானியத்தை 30 லட்சம் ரூபாயிலிருந்து 50 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, நாகூர் தர்கா சந்தனக்கூடு திருவிழாவிற்கு தேவைப்படும் சந்தனக் கட்டைகளை ஆண்டுதோறும் விலையில்லாமல் வழங்கி வருவது, மாவட்ட ஹாஜிக்கள் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு ஆற்றி வரும் சமூகப் பணிகளை கருத்தில் கொண்டு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கி வருவது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது. இந்த புனித ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது  உளமார்ந்த  ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து