Idhayam Matrimony

எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து வைரஸ் கசிந்ததாக கூறுவது வெறும் கட்டுக்கதை : உகான் வைராலஜி நிறுவனம் மறுப்பு

திங்கட்கிழமை, 25 மே 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பீஜிங் : கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சையில் உகான் வைராலஜி நிறுவனம் தனது மவுனத்தை கலைத்தது. எங்கள் ஆய்வுக்கூடத்தில் கொரோனா வைரஸ் கசிந்ததாக கூறுவது வெறும் கட்டுக்கதை என்று அந்த நிறுவனம் கூறி உள்ளது. 

கொரோனா வைரஸ் என்ற பெயரை கேட்டாலே உலக நாடுகள் அதிர்ந்து போகின்றன. சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக வெளிப்பட்ட இந்த வைரஸ், இப்போது உலகமெங்கும் 54 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு பரவி விட்டது. 3 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பலி கொண்டு விட்டது. இந்த வைரஸ் தோற்றம் பற்றிய சர்ச்சை இன்னும் நீடித்து வருகிறது. 

ஆரம்பத்தில் இந்த வைரஸ் சீனாவின் மத்திய நகரமான உகானில் உள்ள கடல்வாழ் உயிரினங்களை விற்பனை செய்யும் சந்தையில் இருந்து வெளிப்பட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால் அமெரிக்க டெலிவிஷன் ஒன்று, இந்த வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல, உகான் நகரில் உள்ள வைராலஜி நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான், அங்கிருந்து கசிந்துதான் உலகமெங்கும் பரவி இருக்கிறது என்று பரபரப்பு செய்தி வெளியிட்டது. இதையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவும் கூறி வருகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் அமெரிக்கா அறிவித்தது. 

இந்த விவகாரத்தில் உகான் வைராலஜி நிறுவனம் இது வரை காத்து வந்த மவுனத்தை கலைத்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனத்தின் இயக்குனர் வாங் யான்யி கூறியதாவது:- 

கொரோனா வைரஸ் எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்தது என்று கூறுவது வெறும் கட்டுக்கதை ஆகும். கொரோனா வைரசை நாங்கள் வைத்திருக்கவில்லை. அந்த வைரசை நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. அந்த வைரஸ் இருப்பது பற்றி கூட எங்களுக்கு தெரியாது. அப்படி இருக்கிறபோது, எங்களிடம் இல்லாதபோது அந்த வைரஸ் எப்படி எங்கள் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்தது? இவ்வாறு அவர் கூறினார் என சீன அரசு ஊடகம் கூறுகிறது.

இதற்கு மத்தியில் சீனாவில் இப்போது மீண்டும் பரவி வருகிற இந்த வைரஸ் தொற்று புதிதாக 3 பேருக்கு பரவி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அங்கு இப்போது 79 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து