முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா, சீனா படைகள் குவிப்பால் லடாக் எல்லையில் பதற்றம் அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : லடாக் எல்லைப் பகுதிகளில் சீனாவுக்கு பதிலடியாக இந்தியாவும் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இரு நாடுகளின் ராணுவமும் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும் போது அவ்வப்போது பதற்றம் உருவாகிறது. கடந்த 5-ம் தேதி லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டதுடன், கம்புகள் மற்றும் கற்களாலும் தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது. இதே போல் கல்வான் பள்ளத்தாக்கிலும் மோதல் போக்கு நீடிக்கிறது.

ஆனால் பதற்றத்தை தணிக்க கமாண்டர் நிலை அதிகாரிகளிடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தற்போது லடாக் எல்லையை ஒட்டி உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில்  சீன படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. தற்காலிக கூடாரங்களை அமைத்து, சாலை போடும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

பதுங்கு குழிகளை அமைக்கும் நோக்குடன் கனரக இயந்திரங்களை கொண்டு வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் அங்கு படைகளை குவித்து வருகிறது. சீன ராணுவத்தை விட அதிக எண்ணிக்கையில் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளும் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்து உள்ளது. இரு படைகளும் முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் பதற்றம் தீவிரமடைந்து பெரிய அளவில் மோதல் உருவாக வாய்ப்பு உள்ளது.

எனவே பதற்றத்தை தணிக்க, தூதரக ரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் கடந்த 2017-ம் ஆண்டு இந்தியா - பூடான் - சீனா எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில் இந்தியா - சீனா படைகள் குவிக்கப்பட்டதால் 73 நாட்கள் போர் பதற்றம் நீடித்தது. அதன் பின்னர் அமைதியை நிலைநிறுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதையடுத்து, பதற்றம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து