முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவில் இருந்து 1.50 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகம் வந்தன

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து மேலும் ஒன்றரை லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் நேற்று தமிழகம் வந்தன.

இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. இதுவரை ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்து 172 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளான மாநிலத்தில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. அங்கு பாதிப்பு 52 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதற்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் சோதனைகளை விரைவுப்படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த 17-ம் தேதி ஒரு லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகத்திற்கு வந்தன. இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியாவில் இருந்து மேலும் ஒன்றரை லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் நேற்று தமிழகம் வந்தன.

இந்த கருவிகள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு தேவையின் அடிப்படையில் பகிர்ந்து வழங்கப்படும். இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்படும். இதுவரை தென்கொரியாவில் இருந்து இரண்டரை லட்சம் பி.சி.ஆர். கருவிகள் வந்துள்ளன. இன்னும் ஏழரை லட்சம் கருவிகள் வரவேண்டி உள்ளது.

வாரத்திற்கு ஒரு லட்சம் முதல் 1.50 லட்சம் கருவிகள் வீதம் எஞ்சிய கருவிகள் தமிழகத்திற்கு வந்து சேரும். பி.சி.ஆர். கருவிகள் மூலம் தமிழகம் முழுவதும் நாள் தோறும் 12 ஆயிரத்து 275 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை இந்த கருவிகள் மூலம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு முழுவதும் 68 பரிசோதனை மையங்களில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகிறது. இதில் 41 அரசு மருத்துவமனைகள், மீதியுள்ள 27 மருத்துவமனைகள் தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகும். பி.சி.ஆர். என்பது ரேபிட் டெஸ்ட் போன்று இல்லை. முடிவு வருவதற்கு சற்று நேரம் ஆனாலும் சரியான முடிவுகளை காட்டக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து