முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாளையுடன் நிறைவடைகிறது அக்னி நட்சத்திரம்: மக்கள் நிம்மதி

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் நாளை 28-ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில் தற்போது வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. 

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாக கருதப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வேலூர், சேலம், கரூர், திருத்தணி, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, பாளையங்கோட்டை போன்ற நகரங்களில் வெயில் அளவு சற்று அதிகமாகவே காணப்பட்டது. அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பத்தின் தாக்கம் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகியது.

மேலும் ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்தில் முடிந்தது. மேலும், திசைமாறி சென்ற ஆம்பன் புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து சென்றதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் கத்திரி வெயில் என்று அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளை 28-ம் தேதியோடு நிறைவடைகிறது. இருந்தாலும் அதற்கு பிறகு ஒரு சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்று வானிலை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க அதிக அளவில் தண்ணீர் அருந்துவதோடு, நுங்கு, பதனீர், இளநீர், மோர், தர்பூசணி போன்றவற்றை அதிக அளவில் சாப்பிட வேண்டும் என்று அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே டாக்டர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி கிடப்பதால் இவற்றை எல்லாம் சாப்பிட முடியாததுடன், சாப்பிட வேண்டிய அவசியமும் பொதுமக்களுக்கு ஏற்படவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து