முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 26 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று 4-வது முறையாக மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். மருத்துவ பரிசோதனையில் மேலும் செய்ய வேண்டிய உத்திகள், இறப்புகளை முற்றிலுமாக தவிர்க்க செய்ய வேண்டிய சிகிச்சை முறைகள், சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. 

மேலும் இம்மாதம் 31-ம் தேதியுடன் முடிவடையவுள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா அல்லது தளர்வுகள் ஏற்படுத்துவதா என்பது குறித்தும் மருத்துவ குழுவினர்களிடம் முதல்வர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. 

அம்மாவின் அரசு கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் 4-வது முறையாக காணொலி காட்சி மூலமாக கொரோனா வைரஸ் தொற்று குறித்த நடவடிக்கைகளை அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்து செல்லும் நோக்கத்தோடு (A way forward) மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பாக செயல்படுத்தப்பட வேண்டிய உத்திகள், மருத்துவ சிகிச்சை குறித்த வழிமுறைகள், நெறிமுறைகள், இறப்புகளை முற்றிலுமாக தவிர்க்க மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை முறைகள், நோய்த் தொற்றால் எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், தமிழ்நாட்டில் குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்  போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், அரசு தலைமை செயலாளர் சண்முகம், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். .

இம்மாதம் 31-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு தளர்வுகள் செய்யப்பட்டிருக்கின்றன. படிப்படியாக தளர்வுகள் இருக்கும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.நோயின் தாக்கம் குறைய குறைய அந்தந்த மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னையை பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. இதில் முதல்வர் தீவிர கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சென்னை மாவட்டத்துக்கு தனியாக சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணனை நியமித்தார்.

இது தவிர மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி மற்றும் அதிகாரிகளை நியமித்து கண்காணித்து நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். சென்னையில் அதிக அளவு கொரோனா பாதிப்பு இருப்பதால் அதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து