முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள நிலவரத்திற்கேற்ப சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதி ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

வியாழக்கிழமை, 28 மே 2020      தமிழகம்
Image Unavailable

கள நிலவரத்திற்கேற்ப சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும் என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 144  தடை உத்தரவு வரும் 31-ம் தேதி வரை அமலில் உள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதமாக சலூன் கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், ஊரக பகுதிகளில்  கடந்த 19-ம் தேதி சலூன் கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவை பிறப்பித்தது. ஆனால், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி வழங்கவில்லை. இதைதொடர்ந்து, கடந்த 25-ம் தேதி தமிழகம் முழுவதும்  சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள சலூன் கடைகளை காலை 7 மணிமுதல் மாலை 7 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்தது.

இதற்கிடையே, கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ள சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு முடி திருத்துவோர் நலச்சங்கத் தலைவர் முனுசாமி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, கிராம பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும், படிப்படியாக திறப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் அரசு தரப்பில் ஐகோர்ட்டில்  விளக்கமளிக்கப்பட்டது. இது குறித்து,  தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், வழக்கு விசாரணையை 28-ம் (நேற்று)தேதிக்கு ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கள நிலவரத்திற்கேற்ப சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கப்படும், கள நிலவரங்களை ஆய்வு  செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 8-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து