முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை: கொரோனாவை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம் : முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 29 மே 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : நாளை (31-ம் தேதி) ஊரடங்கு முடியவுள்ள நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், தலைமைச் செயலாளர் க.சண்முகம், காவல் துறை தலைமை இயக்குநர் திரிபாதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

கொரோனா தொற்றை தடுக்க 6 முறை மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். இந்தியா முழுவதும் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தொற்று குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், சென்னையில் மக்கள் தொகை அதிகம். குறுகலான தெருக்கள். ஒரே வீட்டில் பலர் வசிக்கிறார்கள். வைரசை கட்டுப்படுத்த அம்மாவின் அரசு எடுத்த முயற்சியால் பரவல் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடு, வளர்ந்த நாடுகளில் உயிரிழப்பு அதிகம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்ததன் விளைவாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது. 

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி தொடர்ந்து பணிபுரிய விரும்பினால் ஆட்சியர்கள் உதவி செய்ய வேண்டும். தொழிற்சாலைகள், அரசு வழிகாட்டுதல் படி நடைபெறுகிறதா என ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை முறையாக ஆட்சியர்கள் அமல்படுத்த வேண்டும். சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா தொடர்புடையவர்களை கண்டறிந்து ஆட்சியர்கள் சிகிச்சை தர வேண்டும். சென்னை மாவட்டத்துக்குள் வருவோரை பரிசோதனை செய்ய வேண்டும். தளர்வு அறிவிக்கும் முன் ஆட்சியர்கள் தலைமைச் செயலரிடம் தொடர்பு கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு நேரடியாக பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனைக்கு தீர்வுகாண உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

மக்கள் அச்சப்பட தேவை இல்லை. ஆனால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது மக்களின் கடமை. அரசு சொல்லும் வழிமுறைகளை பின்பற்றினால் இதனை தடுக்க முடியும். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனா பரவலை தடுக்க முடியும். மக்களின் ஒத்துழைப்பு மிகமிக அவசியம்.

கொரோனாவுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. நமது மருத்துவர்கள் சிறப்பான முறையில் உரிய சிகிச்சையை நல்ல முறையில் அளித்து வருவதால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண நலம் பெற்று வீடு திரும்பி வருகின்றனர். மருத்துவ நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி அரசு செயல்படுகிறது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 

தமிழ்நாட்டை பொறுத்த வரை தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் நோய் பரவுவதற்கு முன்பே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம். பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தினோம். 

கொரோனா பரிசோதனை மையங்கள் 42 அரசு மருத்துவமனைகளிலும், தனியாரிடம் 28 மையங்களும் என மொத்தம் 70 பரிசோதனை மையங்கள் உள்ளன. போதுமான அளவு முகக் கவசம், வெண்டிலேட்டர், பாதுகாப்பு உடைகள் உள்ளன. அரசை பொறுத்தவரை வேகமாக, துரிதமாக செயல்படுகிறோம். தினசரி சுமார் 12 ஆயிரம் பரிசோதனைகள் நடைபெறுகின்றன. 

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி மக்களுக்கு கிடைக்கிறது. காய்கறி விலை உயரவில்லை. வேளாண் பணிகள் தடையின்றி நடைபெறுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வீடு தேடி பொருட்கள் கொண்டு சென்று கொடுக்கப்படுகிறது.

பல்வேறு துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம். அதிகமான அளவில் பரிசோதனை நடப்பதால் தான் அறிகுறி உள்ளவர்களை கண்டுபிடிக்க முடிகிறது. அவர்களுக்கு சிகிச்சை தரப்படுகிறது.

நோய் பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசு தவறிவிட்டது என சிலர் கூறுகிறார்கள். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் சிறப்பாக பணியாற்றிய தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் துறை அதிகாரிகள், போலீசார், மாவட்ட கலெக்டர்கள், சூப்பிரண்டுகள், பல்வேறு துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து