மகளிர் சுய உதவிக் குழுக்கள் - சிறு, குறு தொழில்கள், விவசாயத்துக்கு வங்கிகள் அதிக கடன் வழங்க வேண்டும் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 30 மே 2020      தமிழகம்
Edappadi-Govt Photo 2020 05 30

Source: provided

சென்னை : சிறு, குறு நிறுவனங்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற மாநில அளவிலான வங்கிகளின் குழுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

உலகமே கொரோனா பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கும் சவாலான இக்கால கட்டத்தில், கொரோனா தொற்றைத் தடுப்பதற்கும், இந்த நோயினால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதற்கும், கடந்த நான்கு மாதங்களாக அம்மாவின் அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.  சிறந்த மருத்துவ சிகிச்சை அளித்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் பூரண குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை மிக அதிகமாகவும், இந்த நோயினால் ஏற்படும் இறப்பு மிகக் குறைவாகவும் தமிழகத்தில் உள்ளது.   இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை  அம்மாவின் அரசு எடுத்து வருகிறது.  முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரங்கராஜன்  தலைமையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்திட ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்து நான் உத்தரவிட்டேன்.  

ஊரடங்கின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளன. இந்த சூழ்நிலையை எதிர்கொள்வதற்கு மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் பல்வேறு முயற்சிகள் மற்றும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளன. பல்வேறு தொழில்களுக்கு இந்த நேரத்தில் அத்தியாவசியத் தேவை வங்கிகளின் கடன் உதவி தான்.  

தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக கடன் வைப்பு தொகை விகிதம் (Credit Deposit Ratio) நூறு  சதவீதத்தை காட்டிலும் அதிகமாகவே இருந்துள்ளது.  இது, தமிழ்நாட்டில் தொழில் செய்வதற்கு தொழில் நிறுவனங்கள் கடன்களை பெற அதிகளவில் முன்வருகிறார்கள் என்பது மட்டுமல்லாமல், வங்கிகளும் முனைப்போடு செயல்படுவது தெளிவாகிறது.  இது போன்ற ஒத்துழைப்பை நான் உங்களிடமிருந்து இக்கால கட்டத்தில் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன். இந்த ஆண்டிற்கான(2020-21) 4,21,404 கோடி ரூபாய் முதலீடு உள்ள ஆண்டுக் கடன் திட்டத்தை வெளியிடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். இந்த ஆண்டு கடன் திட்டத்தில் வேளாண்மைத் துறைக்கு ரூபாய் 1,48,859 கோடி, குறு, சிறு தொழில்களுக்கு 92,075 கோடி ரூபாய் வழங்கப்படவுள்ளது. 2020-21ஆம் ஆண்டு தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஒரு உத்வேகம் வழங்குமென்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.

மூன்று முக்கியமான துறைகளைப் பற்றி நான் விவாதிக்க உள்ளேன்.    மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இருக்கின்றதால், டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி முழுவீச்சில் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு வேளாண் உற்பத்தி மிகவும் இன்றியமையாதது என்பதை கருத்தில் கொண்டு, விவசாயத்திற்கான கடன் உதவியை வங்கிகள் உடனுக்குடன் வழங்கி, விவசாயிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  தமிழ்நாட்டில் இது வரை 20 லட்சத்து 20 ஆயிரம் உழவர் கடன் அட்டைகள் (Kisan Credit Card) விவசாயிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளன.  இந்தக் கடன் அட்டைகளின் மூலம் விவசாயிகள் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை விதைகள், உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் வாங்க, வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் / வங்கிகள் மூலமாக கடன் வழங்கப்படுகிறது.  நீங்கள் அனைவரும் உங்கள் பகுதிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி, இந்த உழவர் கடன் அட்டைகளை அனைத்து விவசாயிகளுக்கும் தாராளமாக வழங்க வேண்டும். 

மத்திய நிதி அமைச்சர்,  குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) பல்வேறு புதிய திட்டங்களை சமீபத்தில் அறிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் ஏறத்தாழ 50 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.  இந்நிறுவனங்களில் சுமார் ஒரு கோடி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் MSME தொழில் துறையின் பங்கு ஏறத்தாழ 30 சதவீதமாகும்.  அரசின் சிறப்பு சலுகை திட்டங்களை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது நம் அனைவரின் கடமையாகும். மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 3 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி அதிகளவில் நம்முடைய மாநிலத்திற்கு கிடைக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடனாக வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.  2018-19ஆம் ஆண்டு 8,923 கோடி ரூபாய் அளவிற்கு புதிய கடனுதவி இத்துறைக்கு அளிக்கப்பட்டது.  இத்துறைக்கு அளிக்கப்படும் கடனுதவியின் வருடாந்திர வளர்ச்சி 4 சதவீதம் என்ற மிக குறைவான அளவிலேயே உள்ளது. இந்த சதவீதத்தை பெரிய அளவில் உயர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  மத்திய அரசின் குறு, சிறு நிறுவனங்கள் கடன் உத்தரவாத நிதியத்தின் மூலம் தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் கடனுதவி 2017-18ல் 1,784 கோடி ரூபாயிலிருந்து 2018-19ல் 2,543 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை போக்குவதற்காக இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் கடனுதவி மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். 

தமிழ்நாட்டில் ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், ஊரகப் பகுதி மக்களின் வருமானத்தைப் பெருக்கவும், உலக வங்கி உதவியுடன் ஊரக புத்தாக்கத் திட்டம்  என்ற ஒரு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டத்தின் கீழ், கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிதாக தொழில்களை தொடங்கவும் 300 கோடி ரூபாய் கொரோனா சிறப்பு நிதியுதவித் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை 28.5.2020 அன்று நான் துவக்கி வைத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், வறுமையைப் போக்கவும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.  அக்குழுக்கள் சிறப்பாக செயல்பட அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அம்மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பாதுகாத்து வருகிறது.  அந்த வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு 2019-20ஆம் ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 13,301 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. 2020-21ஆம் ஆண்டுக்கு 15,000 கோடி ரூபாய் கடனுதவி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் உப இலக்காக ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 5,500 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்குறியீடுகளை வருகின்ற 2021 ஜனவரி மாதத்திற்குள் எய்தி சாதனை படைத்திட வேண்டும் என வங்கிகளை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்களை குறு நிறுவனங்களாக உருவாக்கிட, பிணையில்லா கடன் உத்தரவாத நிதித் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் 20 லட்சம் ரூபாய் வரை பிணையம் இல்லாக் கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் சிறந்த மகளிர் சுய உதவிக் குழுக்களை பெருமளவில் தேர்வு செய்து அவர்களுக்கு கடன் உதவி வழங்கி தொழில் தொடங்கவும், வாழ்வாதாரம் மேம்பாடு அடையவும் நீங்கள் அனைவரும் உதவி புரிய வேண்டும்.

தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் 35 லட்சம் நபர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கான கூலித்தொகையை வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று வாங்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது. தற்பொழுது, கொரோனா வைரஸ் தொற்று இருக்கின்றதால் ஏழை மக்கள் அங்கு சென்று கூலித் தொகையை வாங்குவது கடினமாக இருக்கிறது. கொரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணியில் நாம் ஈடுபட்டுள்ள இந்தக் காலக்கட்டத்தில் (மூன்று மாத காலத்திற்கு மட்டும்), இந்த நோய் குறைகின்ற வரை அவர்கள் இந்தத் தொழில் புரிகின்ற இடங்களுக்கு வங்கிகளின் அதிகாரிகளே சென்று கூலித் தொகையை அவர்களிடம் நேரடியாக வழங்கினால் சரியாக இருக்கும். 

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து