முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாத்தான்குளம் தந்தை - மகன் பிரேதப் பரிசோதனை அறிக்கை நெல்லை சரக டி.ஐ.ஜி.யிடம் ஒப்படைப்பு : விரைவில் தொடங்குகிறது விசாரணை

செவ்வாய்க்கிழமை, 30 ஜூன் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : சாத்தான்குளம் தந்தை, மகன் ஆகியோரின் முதல்நிலை உடற்கூராய்வு அறிக்கை நெல்லை சரக டிஜிபி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி பதிவாளர் நெல்லை சரக டி.ஜி.பி.யிடம் ஒப்படைத்தார். 

வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் உயிரிழப்பு குறித்த விவசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தது தொடர்பான அவமதிப்பு வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கண்காணிப்பாளர் குமார், டி.எஸ்.பி. பிரதாபன், காவலர் மகாராஜன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற அறிவுறுத்தல்படி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ஏ.டி.எஸ்.பி. மற்றும் டி.எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நீதித்துறை நடுவரை அவதூறாக பேசிய காவலர் மகாராஜன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவலர்கள் செய்தது தவறு என்றும் அதிக மன அழுத்தம் காரணமாகவே இந்த நிகழ்வு நடைபெற்றதாகவும் முறையிட்டார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், நீதித்துறை நடுவர் தான் விசாரிக்கிறார் என்பதை அறிந்தும் ஏன் பிரச்னையை பெரிதுபடுத்தும் விதமாக நடந்து கொண்டது ஏன் என்று கேள்வியெழுப்பினர். தொடர்ந்து காவலர்கள் மூன்று பேர் தரப்பில் வழக்கறிஞர்களை நியமித்து உரிய விளக்கம் அளிக்க 4 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

தந்தை, மகன் பிரேத பரிசோதனையில் அவர்களது உடலில் மோசமான காயங்கள் இருப்பது உறுதியாவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அதனடிப்படையில் காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாகக் கூறினர். பெண் காவலர்  சாட்சி அளிக்கையில் மிகவும் அச்சமடைந்து காணப்பட்டதாக நீதித்துறை நடுவர் கூறியிருப்பதால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

சி.பி.ஐ. அனுமதி பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறிய நீதிபதிகள், சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்படும் வரை நெல்லை சரக டி.ஐ.ஜி. அல்லது நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு விசாரணையை ஏற்க முடியுமா என்று கேள்வியெழுப்பினர்.

இதுதொடர்பாக அரசின் பதிலை பெற்று தெரிவிக்கும்படி கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கை விசாரிக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனையேற்று  கொண்ட நீதிபதிகள், நெல்லை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி அனில்குமார் இந்த வழக்கில் இன்றே(நேற்று) விசாரணையை தொடங்க உத்தரவிட்டனர்.

மேலும் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் பிரேதப்பரிசோதனை அறிக்கையை சற்று நேரத்தில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யிடம் ஒப்படைக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் ஆகியோரின் முதல்நிலை உடற்கூராய்வு அறிக்கை நெல்லை சரக டி.ஜி.பி.-யிடம் ஒப்படைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் படி பதிவாளர் நெல்லை சரக டி.ஜி.பி.யிடம் ஒப்படைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து