முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனைஅடைந்தேன். மன்னர் மன்னன்  தமிழக அரசின் திரு.வி.க. விருது, கலைமாமணி விருது,  புதுச்சேரி அரசின்  தமிழ்மாமணி விருது உள்ளிட்ட பல  விருதுகளை  பெற்றுள்ளார்.

இவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும்,  மொழிப்போர் போராட்டத்திலும் ஈடுபட்ட தியாகியாவார்.  மன்னர் மன்னன், கர்மவீரர் காமராஜர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகியவர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் அன்பைப் பெற்றவர் ஆவார். 50-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி சிறந்த எழுத்தாளராகவும், சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ்க் கவிஞர் நாளாக ஆண்டுதோறும் கொண்டாட அம்மாவின் அரசு அறிவித்த போது,  அதற்கு நன்றி தெரிவித்தும், திருவள்ளூரில் நடைபெற்ற முதல் தமிழ்க் கவிஞர் நாள் விழாவில் தமது அகவை முதிர்வையும், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மன்னர் மன்னனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல  இறைவனை  வேண்டுகிறேன்.  இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து