முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊட்டியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

புதன்கிழமை, 8 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஊட்டி : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை (வெள்ளிக்கிழமை) ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு என மொத்தம் 18 பிரிவுகள் உள்ளன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி உள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.

மலைப்பாதைகளில் ஏற்படும் விபத்துகளில் படுகாயம் அடைந்தவர்கள், வனவிலங்குகள் தாக்குதலால் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால் ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல 3 மணி நேரம் ஆகிறது.

குறிப்பாக கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வருவதால், போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் கோவைக்கு ஆம்புலன்ஸ் செல்லும் போது காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கின்றன. எனவே ஊட்டியில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். 

இதற்கிடையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உள்பட 6 மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்காக ஊட்டியில் உள்ள எச்.பி.எப். பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட நிலம் வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், அதை மருத்துவ கல்லூரிக்கு ஒதுக்கீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. 

இதையடுத்து வனத்துறையின் ஒத்துழைப்போடு 25 ஏக்கர் நிலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான டெண்டர் விடும் பணியும் முடிந்தது. 

இந்த நிலையில் அடிக்கல் நாட்டு விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதுகுறித்து நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது,  நீலகிரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊட்டி மருத்துவ கல்லூரி அமைக்க அனுமதி கிடைத்தது. தொடர்ந்து 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, நாளை அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். இதையடுத்து கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து