மும்பை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன எனவும், அவர்கள் இருவரின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது கணவர் மற்றும், மாமனாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் தாம் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமிதாப், தமது குடும்பத்தினர், பணியாளர்கள் பரிசோதனை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் கடந்த 10 நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தாங்களாகவே பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளும்படி அமிதாப் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே போன்று அவரது மகனும் பாலிவுட் திரை நட்சத்திரமுமான அபிஷேக்பச்சனும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கொரோனா சிறிய அளவில் அறிகுறி இருந்ததால் தாமும் தந்தை அமிதாப்பச்சனும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கொரோனா தாக்கம் அதிகம் உள்ள மும்பையில் ஒளிப்பதிவு கூடம் ஒன்றிற்கு சென்று வந்ததால் அபிஷேக்பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவரிடம் இருந்து தந்தை அமிதாப்பச்சனுக்கும் தொற்று பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனிடையே அமிதாப்பின் மனைவி ஜெயாபச்சனுக்கு டுக்கப்பட்ட சளி மாதிரி பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அமிதாப், அபிஷேக் விரைவில் குணமடைய திரையுலகினர், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக்பச்சனுக்கு உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இதனால் அவர்கள் விரைவில் வீடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.