Sachin Pilot 2020 07 14

Source: provided

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். 

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் உள்ளனர். ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பா.ஜ.க. சதி செய்வதாக முதல்வர் அசோக் கெலாட் சில நாட்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக போலீஸ் தரப்பில் துணை முதல்வர் சச்சின் பைலட் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால் கோபமடைந்த சச்சின் பைலட், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் டெல்லி அருகேயுள்ள குருகிராமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டார். இதனால், முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பனிப்போர் மேலும் வலுப்பெற்றது.

தனக்கு 30 எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருப்பதாக சச்சின் கூறி வருகிறார். ஆனால், டெல்லியில் மானேசர் ஓட்டலில் முகாமிட்டு இருக்கும் சச்சினுடன் வெறும் 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இதற்கிடையில், பா.ஜ.க. மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை அவர் சந்தித்துப் பேசினார். இதனால் சச்சின் பைலட் பா.ஜ.க.வில் சேருவாரா என்று பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், நேற்று ஜெய்ப்பூரில் நடந்த இரண்டாவது சட்டமன்றக் கூட்டத்திலும் இரண்டும் அமைச்சர்களுடன் மொத்தம் 18 பேர் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் அடிப்படையிலும், எம்.எல்.ஏ.க்களை கட்சியின் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டு தன் பக்கம் இழுத்த குற்றத்திற்காக சச்சின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளது. 

மேலும், காங்கிரசிலிருந்து சச்சின் பைலட்டை நீக்குவதற்கு எம்.எல்.ஏ.கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து  இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாது, ராஜஸ்தானின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கோவிந்த் சிங் டோட்டாஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா அறிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், ராஜஸ்தான் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட் தனது டுவிட்டரின் முகப்பு பக்கத்தில் மாற்றம் செய்துள்ளார். 

அதில், பழைய முகப்பு படத்தில், ராஜஸ்தான் துணை முதல்வர், பிரதேச காங்கிரஸ் தலைவர், முன்னாள் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொடர்பு இணை மந்திரி மற்றும் முன்னாள் கார்ப்பரேட் விவகார இணை மந்திரி ஆகிய பொறுப்புகளை வகித்தது குறிப்பிடப்பட்டு இருந்தது. 

அவற்றை மாற்றியமைத்து உள்ள சச்சின் பைலட், டோங்க் தொகுதியின் எம்.எல்.ஏ., முன்னாள் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொடர்பு இணை அமைச்சர் மற்றும் முன்னாள் கார்ப்பரேட் விவகார இணை அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகிப்பது போன்று பதிவு செய்துள்ளார்.  அவரது டுவிட்டர் பதிவுகளை 23 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து