முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆகஸ்ட் முதல் வாரத்தில் 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்; பெற்றோரிடம் கருத்து கேட்ட பின்பே பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

புதன்கிழமை, 22 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

ஈரோடு : பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மார்ச் 16-ம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போய்க்கொண்டே உள்ளது. ஜூலை மாதத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்த பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. 

எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துப் பெற்றோர்கள் கவலை எழுப்பினர். 

இந்நிலையில், பெற்றோர்களிடம் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு, கோபிச்செட்டி பாளையம் அருகே வெள்ளாங்கோயில், சிறுவலூர், அயலூர் உள்ளிட்ட 7 கிராம ஊராட்சிகளில் சாலைகள் மற்றும் தடுப்பணைத் திட்டங்களுக்கான பூமி பூஜை போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன், நிகழ்ச்சி முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது பேசிய அவர், 

10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும். எப்போது பள்ளிகளைத் திறக்கலாம் என்று பெற்றோர்கள் அனைவரின் கருத்துகள் கேட்டறியப்படும். கொரோனா சூழல் படிப்படியாக மாறிய பிறகு, பெற்றோரின் கருத்துகளை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார். கொரோனா தொற்றைக் கருத்தில் கொண்டு, 10-ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து