முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடமாடும் பால் வண்டி முகவர்களாக ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்கள் நியமனம் : ஆவின் நிறுவனம் புதிய முயற்சி

வெள்ளிக்கிழமை, 24 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கொரோனா பேரிடர் காலத்தில் ஆட்டோ,  டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமிக்க ஆவின் நிறுவனம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆட்டோ, டாக்சி உரிமையாளர்களுக்கு மாதம் 15 ஆயிரத்திற்கு குறையில்லாமல் சம்பாதிக்க ஒரு அருமையான வாய்ப்பை ஆவின் வழங்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவி வரும் நிலையில் ஆட்டோ,  டாக்ஸி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் முதல்வரின் வழிகாட்டுதலின்படி, அவர்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையில் ஆவின் பால் மற்றும் உப பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு முதல் கட்டமாக திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களை நடமாடும் பால் வண்டி  முகவர்களாக  ஆவின் நிறுவனம் நியமனம் செய்துள்ளது.

தற்போது நாள் ஒன்றுக்கு சுமார்  40 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 25 லட்சம் லிட்டம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  கொரோனா காலத்திற்கு முன்பு முகவர்கள் ஆவதற்காக வைப்பு தொகை ரூ.10,000 ஆக இருந்த நிலையில், தற்போது வைப்புத் தொகை ரூ.1,000/-ஆக ஆவின் நிறுவனம் குறைத்துள்ளதால், 575 புதிய முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.    

தமிழகம் முழுவதும் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனையை தீவிரப்படுத்தும் வகையில் வாழ்வாதாரம் இழந்திருக்கும் ஆட்டோ,  டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை நடமாடும் பால் வண்டி முகவர்களாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

எனவே,  அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களில் ரூ.1,000/- பணமாகவோ அல்லது காசோலையாகவோ வைப்பு தொகையாக செலுத்தி உடனடியாக நடமாடும் பால் வண்டி முகவர்களாக நியமனம் பெற்றுக் கொள்ளலாம்.  சென்னை பெருநகர மாநகரத்திற்கு ஆவின்  தலைமை அலுவலகத்தில்  உள்ள பொது மேலாளரிடம் (விற்பனை) வைப்பு தொகையினை பணமாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.

இதனால் பால் முகவர்களாக மாறும் ஆட்டோ, டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நடமாடும் பால் வண்டி முகவர்களாக மாதம் சுமார் ரூ.15,000/- குறையாமல் வருமானம் கிடைக்க ஆவின் நிர்வாகம் வழிவகை செய்துள்ளது. எனவே, இவ்வாய்பினை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆவின் நிறுவனம் திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுநர்களை பால் முகவர்களாக நியமனம் செய்துள்ளது. அதே போல், ஆவின் நிறுவனம் நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் ஆட்டோ ஓட்டுநர்களை பால் முகவர்களாக நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து