முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை : பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 4 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

கூடலூர் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது.

152 அடி உயரம் கொண்ட இந்த அணையின் மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பிலான நிலங்கள் இருபோக பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் முதல் போக சாகுபடிக்காக இந்த அணையில் இருந்து ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு பருவமழை, கோடை மழை சரிவர பெய்யாததால் அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது காலதாமதம் ஆகி வருகிறது. அணையில் தற்போது 115.75 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இந்தநிலையில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தென்மேற்கு பருவமழை சாரலாக பெய்து வருகிறது.

இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதற்கிடையே தேனி மாவட்டத்தில் கூடலூர், கம்பம், லோயர் கேம்ப், குமுளி உள்ளிட்ட பகுதிகளிலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 604 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று முன்தினம் வினாடிக்கு 1,032 கன அடியாக உயர்ந்தது. தற்போது அணையில் 1,862 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்புள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து