மழை பாதிப்புகளை தடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      தமிழகம்
SP Velumani 2020 07 28

Source: provided

திருப்பூர் : மழை பாதிப்புகளை தடுக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்று மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கை நேரில் பார்வையிட்டஅமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் செல்வதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் அவர் தெரிவித்ததாவது, தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதனால் கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வருகின்றன. 

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பில்லூர் அணையின் கொள்ளளவான 100 அடியில், 97 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. பில்லூர் அணைக்கு நீராதாரமாக உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இரண்டு நாட்களாக சுமார் 34,000 கன அடிவரை தண்ணீர் வந்த நிலையில், தற்போது அணைக்கு 25,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி 25,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

கடந்த ஆண்டு பில்லூர் அணையிலிருந்து அதிகபட்சமாக 88,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. தற்போது அந்த அளவிற்கு நீர்வரத்து இல்லை என்ற நிலையிலும், அனைத்து பகுதிகளிலும், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி கமிஷ்னர், தீயணைப்புத்துறை, காவல்துறை, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனைத்து முன்னேற்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வரும் நாட்களில் தொடர்ந்து மழை பெய்தால், பில்லூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கும் போது, கரையோரங்களில் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைக்கவும், பொதுமக்களுக்கு தண்டோரா, வாகனங்கள் மூலம் பிரச்சாரம், தொலைகாட்சி மற்றும் ஊடகம் உள்ளிட்டவற்றின் வாயிலாக முறையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வருவாய் பேரிடர் மேலாண்மை துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொது மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கு ஏதுவாக, சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிக் கட்டடங்கள் போன்றவை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் தாழ்வான பகுதிக்கு செல்வதை தவிர்க்கவும், ஆறு, ஏரி, கண்மாயில் குளிப்பதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.அதுபோலவே பொதுப்பணித்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறை மற்றும் பிற துறை அலுவலர்கள் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதுடன், கள ஆய்வும் மேற்கொண்டு வருகிறார்கள்.

முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் அனைத்து குளம் மற்றும் குட்டைகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதன் விளைவாக, நீர்நிரம்பி வருகிறது. மேலும், பருவமழை இயற்கையின் கொடை என்ற போதிலும், மழையால் பொதுமக்கள் எவரும் பாதிக்காத வகையிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. ஏ.கே.செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே.சின்னராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் தாசில்தார் சாந்தாமணி, நகராட்சி கமிஷ்னர் சுரேஷ்குமார், காரமடை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மணிமேகலை மகேந்திரன், கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு, டிஎஸ்பிக்கள் மணி, கிருஷ்ணமூர்த்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து