Idhayam Matrimony

கொரோனா தொற்று காலத்திலும் கூட தொழில் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம்: முதல்வர் எடப்பாடி பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 7 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : கொரோனா தொற்று காலத்திலும்கூட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுடன் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு  தொழில் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார். 

திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை அதிகமாக நிறுவ வேண்டுமென்பது அம்மா அரசின் முதன்மையான கொள்கை ஆகும். அம்மா  2015-ம் ஆண்டு சென்னையில் நடத்திய உலக முதலீட்டாளர் மாநாட்டினைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு அம்மாவின் அரசும் சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, புதிய தொழில்கள் தொடங்குவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது.

இந்தக் கொரோனா தொற்று காலத்திலும்கூட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுடன் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு  தொழில் முதலீட்டை ஈர்த்திருக்கிறோம். இதன்மூலம் சுமார் 67 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளோம்.

இது ஒரு மிகப்பெரிய சாதனை. இந்தச் சோதனையான நேரத்தில் கூட, இந்தியாவிலேயே, அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடுதான். அதேபோல், அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததும் தமிழ்நாடுதான். 

தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.  தென்மாவட்டங்களுக்கு மேலும் அதிகமான தொழிற்சாலைகளை கொண்டு வரவேண்டுமென்று கோரிக்கை வைத்தீர்கள்.

அரசின் விருப்பமும் அதுதான். அம்மா இருக்கின்றபொழுதே தென்மாவட்டங்களுக்கென்று தனிச்சிறப்புத் திட்டங்களை அறிவித்து, அதன் வாயிலாக புதிய தொழில்கள் தொடங்குவதற்கு ஏற்பாடுகளை செய்தார்.

அம்மா வழியிலே, அம்மாவின் அரசும், தென்மாவட்டங்களில் புதிதாக தொழில் தொடங்க விரும்பினால், தொழில் துறை செயலாளர்  குறிப்பிட்டதைப்போல, நிலத்தின் மதிப்பில் பாதியளவு மானியமாகக் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், தொழிற்சாலை அமைப்பதற்கும் மானியம் வழங்குகிறோம்.

தொழில் தொடங்குவதற்கான அனுமதியை Single Window System மூலம் எவ்விதத் தடையுமில்லாமல், குறிப்பிட்ட காலத்திற்குள், மிகவிரைவாக அரசு வழங்குகிறது. இதுபோல பல்வேறு வகைகளில் அரசு உதவி செய்கிறது. எனவே, எவ்வித சிரமமும் இல்லாமல் தொழில் தொடங்கலாம். 

அதேபோல, தொழிற்சாலைகளில் பணிபுரிகின்ற தொழிலாளர்கள், அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்றி பணியாற்றினால்தான் இந்த நோய்த் தொற்றிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

அதனால், அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பின்பற்றி, சிறப்பான முறையில் தொழிற்சாலைகள் இயங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து