மளிகை, காய்கறி வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்துங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      இந்தியா
central government 2020 08 03

Source: provided

புதுடெல்லி : மளிகைக் கடைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள், சாலைகளில் வியாபாரம் செய்பவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்திக்ககூடியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து புதிய இடங்களில் பரவி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் ஆம்புலன்ஸ்களை தயாராக வைத்திருக்கவும், அதில் ஆக்ஸிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள், கருவிகளை வைத்திருக்கவும் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 

கொரோனா நோயாளிகளை தொடக்கத்திலேயே கண்டுபிடித்தல், தீவிரமான பரிசோதனை, தனிமைப்படுத்துதல், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் போன்றவை மூலம் கொரோனா மூலம் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியும்.

இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், நுரையீரல் தொடர்பான நோய்கள் போன்றவை இருக்கிறதா என்பதையும், அதற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் வீட்டுக்கு வீடு பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும்.

யாருக்கேனும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் பகுதிகள், சந்தைகள் இருக்கும் பகுதி, மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி, முதியோர் இல்லம், குடிசைவாழ் பகுதி போன்றவற்றில் கொரோனா பரிசோதனை நடத்தி ஆய்வு செய்ய வேண்டும்.

குறிப்பாக மளிகைக் கடைகள் , காய்கறிக் கடைகள், அதில் பணியாற்றுவோர், பிற வியாபாரிகள் ஆகியோர் பல்வேறு தரப்பட்ட மக்களை நேரடியாகச் சந்திக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து ஐ.சி.எம்.ஆர். விதிமுறைகள்படி கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் வீடுகளில் பரிசோதனை செய்து, நோய்த் தொற்றுக்கு அதிகமான வாய்ப்புள்ள முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், இணை நோய்கள் இருப்பவர்களைப் பரிசோதிக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து