துரைமுருகன்தான் தி.மு.க.வில் அடுத்த விக்கெட் : அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சனிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2020      தமிழகம்
Jayakumar 2020 07 06

Source: provided

சென்னை : தி.மு.க.வில் நீறுபூத்த நெருப்பாக இருந்தது தற்போது எரியத் தொடங்கியுள்ளது. முதல் விக்கெட் கு.க.செல்வம். அடுத்த விக்கெட் துரைமுருகன்தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை மாதவரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழகத்தில் அதிக அளவில் 67,000 பரிசோதனைகளை நாம் செய்துள்ளோம். மொத்தமாக இதுவரை 31 லட்சம் பரிசோதனைகளைச் செய்துள்ளோம்.

இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்று அதிக அளவில் பரிசோதனை செய்தது கிடையாது. மெட்ரோபாலிட்டன் நகரங்கள் என்று பார்க்கும் போது சென்னையில்தான் அதிக அளவு பரிசோதனைகள் செய்துள்ளோம். ஒருங்கிணைப்பு (co-ordination), ஒத்துழைப்பு (co-operation), ஆலோசனை (consultation) என்ற மூன்று ‘சி’-க்களை முக்கியமாக கடைப்பிடிக்கிறோம்.

கொரோனா தொற்றுப் பரிசோதனை டேட்டாக்களை ஆய்வு செய்தால் 13-லிருந்து 60 வயதுள்ளவர்களே அதிகம் பாதித்துள்ளது தெரியவருகிறது. 60 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் 35,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன அர்த்தம் என்றால் 13-லிருந்து 60 வயதுக்குட்பட்டவர்கள் அதிக அளவில் வெளியே சுற்றுகின்றனர்.

அவ்வாறு செல்பவர்கள் ஒழுங்காக சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையின்றி வெளியில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.  கண்காணிப்புப் பகுதிகளைப் பொறுத்தவரை தீவிரமாகக் கண்காணிக்கிறோம்.

அங்கு அடிப்படைத் தேவைகள், சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, அவர்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்து தருகிறோம். ஒரு கழுகுப் பார்வையில் நாங்கள் கண்காணிக்கிறோம். 

நீர் சேமிப்புத் திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் முன்னுரிமை கொடுத்து தூர்வாரி நீர் இருப்பை ஏற்படுத்தியுள்ளோம். அதற்காகப் பல கோடி நிதி உதவி செய்து சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கொசஸ்தலை ஆறு விவகாரத்திலும் கண்டிப்பாக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார்.

தி.மு.க. எம்.எல்.ஏ. பா.ஜ.க. தலைவரைச் சந்தித்த விஷயத்தில் உள்கட்சி விவகாரத்தில் கருத்துச் சொல்வது நியாயமல்ல. ஆனாலும், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் சொல்கிறேன்.

நீறுபூத்த நெருப்பாக இருந்தது. தற்போது எரியத் தொடங்கி உள்ளது. முதல் விக்கெட் கு.க.செல்வம். அடுத்த விக்கெட் யார் என்று கேட்கிறீர்களா? அது அண்ணன் துரைமுருகன்தான் அடுத்த விக்கெட். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து