முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வி செயலர் தகவல்

செவ்வாய்க்கிழமை, 11 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகளை திறக்க வாய்ப்பில்லை என மத்திய உயர்கல்வி செயலர் தெரிவித்துள்ளார்.  

கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் இறுதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், எப்போது மீண்டும் அவை திறக்கப்படும் என்று கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில், மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது தொடர்பான ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. அதில் பங்கேற்ற மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் காரே, கல்லூரி இறுதித் தேர்வுகள் திட்டமிட்டபடி இந்தாண்டு இறுதிக்குள் நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். 

ஆனால், அதே சமயம் வகுப்புகள் தொடங்குவது தாமதமாகலாம் எனவும், அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதம் வரை திறக்கும் வாய்ப்பு குறைவு என மத்திய அரசு மதிப்பீடு செய்திருந்தாலும் பூஜ்யம் கல்வி ஆண்டு(zero academic year) அறிவிக்கப்படாது என உயர்கல்வி செயலர் அமித் காரே நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம் விளக்கியுள்ளார். 

இதனையடுத்து நேற்று நடைபெற்ற கல்வித்துறை உயர்மட்டக்குழு கூட்டத்தில் கல்வி ஆண்டு தொடர்பான ஆலோசனைகள் நடத்தப்பட்டது. சமூக இடைவெளியுடன் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் கல்வி ஆண்டைத் தொடங்க முதலில் பரிந்துரை வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் சிக்கல் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அதன்படி, கொரோனா ஊரடங்கு முடிந்து முதற்கட்டமாக, கல்லூரிகள் மற்றும் 10 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகளை தொடங்கலாம் என அறிவிறுத்தப்பட்டாலும், டிசம்பர் மாதம் வரை ஆன்லைன், சமூக ரேடியோ, தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான, இறுதி அறிவிப்பு அடுத்த 15 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் சமீபத்திய தரவுகளின்படி, 416 கேந்திரிய வித்யாலயாக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் இருக்கின்றன. இதன் அடிப்படையிலே பள்ளிகளைத் டிசம்பர் மாதம் வரை திறக்க வேண்டாம் என்ற பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.

மாநில பள்ளிகளைப் பொறுத்தவரையில், கொரோனாவின் தீவிரத்தைப் பொறுத்து, கல்வியாண்டு தொடங்கப்படும் போது அந்தந்த மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம் என மனிதவள மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து